புதுக்கவிதைக்கும் குறியீட்டுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. புதுக்கவிதையின் தோற்றத்திற்கே குறியீடு காரணமாக இருந்திருக்கிறது. இசையின் உயர்ந்த குறிப்பாற்றலைக் கவிதைக்குத் தர முயன்ற பிரெஞ்சுக் குறியீட்டுக் கவிஞர்களே குறிப்பாற்றலுக்குத் தடையாக இருந்த மரபு யாப்பு விதிகளைக் கைவிட்டு கட்டற்ற கவிதை (Verse libres) எழுதத் தொடங்கினர்.
தமிழிலும் புதுக்கவிதைக்கும் குறியீட்டுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. இலக்கிய இயக்கங்களின் அடிப்படையில் தமிழ்க் கவிதையின் கால கட்டங்களைப் பிரித்த கனகசபாபதி தம்முடைய புதுக் கவிதைக் காலகட்டத்தைக் குறியீட்டியல் காலம் என்று அழைக்கிறார். புதுக்கவிதைத் திறனாய்வாளர்களும் குறியீடு புதுக்கவிதையின் முதன்மைப் பண்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதுக்கவிதைக்கு முற்பட்ட காலத்துக் கவிதைகளிலும் புதுக்கவிதையின் சமகால மரபுக் கவிதைகளிலும் காணப்படாத அளவுக்குப் புதுக்கவிதை யில் குறியீடுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.