தமிழ் இனத்தின் மேன்மைக்கான சிறப்புகளை நெஞ் சை அள்ளும் விதத்தில் பாடியிருப்பது சிலப்பதிகாரம். இந்திய தேசியத்தின் எல்லை காணத் துடித்த மகாகவி பாரதி சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதித் தமிழ்ச் சாதியின் பெருமைகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் மணியாரமாகத் திகழும் அதன் சிறப்பியல்புகளை எண்ணி வியந்தவன்; பாடியவன்; தமிழ்ச் சிந்தனைகளின் உச்சத்திற்குச் சிலம்பு நம்மை அழைத்துச் செல்லுகிறது என்பதுதான் இதற்கான காரணம்; சங்கம் மருவிய காலத்தில் தமிழியம் மெல்லச் சிதைந்து கொண்டிருந்தபோது அதை மீட்க நினைத்துக் காவியம் கண்டவன் இளங்கோ. முத்தமிழ்ச் சுட்டு வையம் அளந்து வானைநிறைப்பது. தமிழ் மூன்றும் அறிபவனுக்குச் சிலம்பு அகர முதல் னகர இறுதியாகக் கற்றுத்தரும் பெற்றியது. இந்த வகையில் கற்பார் சிலம்பினை அன்றிக் கற்பாரோ? எனும் பெருமைக்குரியது. சிலம்பினுக்கு முத்துப்பரல்கள் மாணிக்கப் பரல்கள் இருக்கலாம்; ஆனால் சிலப்பதிகாரத்துக்குள் தமிழ்ப்பரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்தத் தமிழோசையில் தமிழிய வரலாற்று மீட்புணர்ச்சிகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் அதைக் கேட்கவேண்டும்.