அப்போதெல்லாம் ராஜநாராயணனைத் தெரியாது. மணிவண்ணனைத் தெரியும்; அகிலனைத் தெரியும்; படக்கதை ஆசாமிகளுடன் பழக்கம். பழக்கமென்றால் சாமானியப்பட்ட பழக்கமா. தேடி ஓடிப் பழகினேன். சாயங்காலம் பள்ளக் கூடத்திலிருந்து வந்ததும் அம்மா தரும் சோளப் பொரியைப் பையில் போட்டுக் கொண்டு உள்ளூர் வாத்தியார் வீட்டுக்கு ஓடுவேன். அடுப்புக்கூடம் முழுக்க நிறைந்திருக்கும் டீச்சரை அரித்து கல்கி வாங்கி அவசரமாய்ப் புரட்டி தொடர் கதையையும் படக்கதையும் படித்து முடிக்கும் வரை மனசு நிலைகொள்ளாது.