சில இதழ்களுக்காக நான் தொடர்ந்து எழுதி வந்த தமிழகத் திருக்கோயில்கள் பற்றிய தொகுப்பே இந்நூலாகும். அண்மைக் காலமாகத் திருக்கோயில்கள் பற்றி வெளிவரும் கட்டுரைகளும் நூல்களும் அவ்வாலயங்கள் பற்றிய உண்மையான வரலாற்றுச் செய்திகளைக் கூறாமல் அவற்றின் படைப்பாளர்களால் புனையப்பெற்ற கற்பனைச் செய்திகளையும், பரிகாரத் தலங்கள் எனத் திரித்துக் கூறப்பெறும் செய்திகளையும் தாங்கியவைகளாகத் திகழ்கின்றன. உண்மையான அத்தலங்கள் பற்றிய தலபுராண நூல்களில் உள்ள செய்திகளைக் கூட கூறாமல் அவை வரலாற்றுச் செய்திகளைப் புறக்கணித்தவாறே வலம் வருகின்றன. புனையப்பெற்ற செய்திகள் நிலைபெறாமல் இருக்கவும். கல்வெட்டுக்கள் செப்பேடுகள் ஆகியவை கூறும் தரவுகளை வெளிப்படுத்தவும், உண்மையான தலபுராணச் செய்திகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கவும், கோயில் சார்ந்த சிற்பங்கள், ஓவியங்கள், கட்டுமான நுட்பங்கள் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கவும் படைக்கப் பெற்றதே இந்நூலாகும்.