இரண்டாம் குலோத்துங்கனாகிய அநபாய சக்ரவர்த்தியின் முதல் மந்திரியாக விளங்கிய தெய்வச் சேக்கிழார் அம்மாமன்னன் வேண்டுகோளுக்கிணங்கி திருத்தொண்டர் புராணத்தை சொக்கழகாகச் சொல்லில் வடித்தார். அம்மா மன்னன் மகனாகிய இரண்டாம் இராஜராஜன் சேக்கிழார் அடிகள் வாழ்ந்தருளிய காலத்திலேயே அவருடைய ஆசியோடும் வழிகாட்டுதலோடும் மேற்சொன்ன திருத்தொண்டர் புராணத்தைக் கவின்கலை நுட்பத்துடன் கல்லில் வடித்தார். தாராசுரத் திருக்கோயில் சிற்பங்களை ஆய்வு செய்தவர்கள் அவையிற்றை நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே ஆய்வு செய்துள்ளனர். திருத்தொண்டத் தொகையின் அருஞ்செய்திகளை சற்றே விரித்து திருத்தொண்டர் திருவந்தாதி பாடியருளியவர் நம்பியாண்டார் நம்பி. தொகை, அந்தாதி ஆகிய இவையிற்றின் மீது அற்புதமாக எழுப்பப்பட்ட மாபெரும் மந்திரமே பெரியபுராணமாகும். இத்திப்பிய பனுவல் தந்த பார்வையின் அடிப்படையில் முதன்முதலில் தம் ஆய்வை மேற்கொண்டு, அதியற்புதமாக முடிவையும் சாதித்துள்ள பெருமை குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களையே சாரும். இங்கு எளியேன் பயன்படுத்தியுள்ள 'ஏகாரம்' தேற்றம். தாராசுரக் கோயிலின் புடைப்புச் சிற்பங்கள் கயிலையிலே தொடங்கி கயிலையிலேயே நிறைவுறுகின்றன. பொய்யடிமையில்லாத புலவர் மணிவாசகரையே கூறும் வாசகம் என்று பலரும் கூறிவருகின்றனர். புலவர் என்ற பன்மைச் சொல் பலரைச் சுட்டும் என்ற உண்மை அவ்வாசகத்தை விளக்கவந்த சிற்பத்தில் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. அச்சிற்பத்தில் சங்கப் பலகையின் வடிவம் அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.