நானும் நண்பரொருவரும் துங்கபத்திரை ஆற்றங்கரையோரமாக நடந்து கொண்டிருந்தோம். ஏதோ ஓர் உரையாடலின் முடிவில் வாழ்க்கையை கறாராக விளக்கிவிட முடியுமா என்று கேட்டார் நண்பர். வாழ்க்கையின் விளக்கத்தை ஒற்றை வரியால் சுருக்கியுரைக்க முடியும். ஆனால் அக்கணமே அது அந்த வரியைத் தாண்டி விரிவடைந்து போய்விட்டிருக்கும். அப்படி ஒரு விசித்திரத் தன்மை வாழ்க்கைக்குண்டு. வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். சுருக்கியுரைக்கப்பட்ட அத்தகு பல நூறு வரிகளைத் தொகுத்து, அவற்றின் சாரத்தை இன்னொரு வரியாக மாற்றமுடிந்தால் அது வாழ்க்கையின் விளக்கமாக அமையலாம் என்றேன். அவர் புன்னகைத்தார். அப்போதுகூட அமையலாம் என்றுதான் சொல்லமுடிகிறதே தவிர, அமையும் என்று கறாராகச் சொல்லமுடியவில்லையே என்றார். முடிவற்ற உண்மைகளை நாம் அப்படித்தான் உள்வாங்கிக்கொள்ள இயலும் என்று அழுத்திச் சொன்னேன். அதைக் கேட்டபிறகு அவர் புன்னகை அதிகமானது.