இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள பல தகவல்கள் பலருக்குப் புதிதாக இருக்கும், ஒட்டுமொத்த நிகழ்காலத் திருக்குறள் செயல்பாடுகளை உள்ளங்கையில் கொண்டுவந்து சேர்த்த நிலை உருவாகும் என்பதை உணர்ந்தேன். இதில் மறைந்த ஆளுமைகளின் பங்களிப்புகள் தற்போது செயலில் இருந்தால் மட்டுமே அதைச் சேர்க்கவேண்டும், மறைந்த பங்களிப்பாளர்கள், கடந்தகால செயல்பாடுகள் இதில் இடம்பெறாது என்று இந்நூலுக்கு ஒரு எல்லை வகுத்தேன். திருக்குறள் பரப்புரையில், பங்களிப்பில் இருப்பது மட்டுமல்லாமல் திருக்குறளின் மாண்புக்கு ஏற்ப அறம் சார்ந்த முரண்பாடற்ற வாழ்க்கையை வாழ்வதன் தேவையும் ஒரு வரையறையாகச் சேர்க்கப்பட்டது. நிகழ்காலத்தில் நடக்கும் அனைத்துத் திருக்குறள் சார்ந்த கோரிக்கைகள், செயல்பாடுகள், முன்னெடுப்புகள், திட்டங்கள் என்று அனைத்தையும் முடிந்தவரை தொகுத்துவிடவேண்டும் என்று திட்டமிட்டேன்.
இத்தொகுப்பில் திருக்குறள் நூலாசிரியர்கள், திருக்குறள் அமைப்புகள், மொழிபெயர்ப்பாளர்கள், கடந்தகால பங்களிப்பு செய்த திருக்குறள் ஆளுமைகளை விரிவாகத் தொகுப்பது இந்நூலின் நோக்கமல்ல. அது மிகப்பெரிய வரலாற்று ஆவணப் பணி. அது வேறு பெரிய திட்டமாக செய்யவேண்டியுள்ளது. இந்நூலில் கவனம் செலுத்த திட்டமிட்டது நிகழ்காலத்தில் உலகெங்கும் செயல் விளைவை ஏற்படுத்திவரும் திருக்குறள் பரவலாக்கல் திட்டங்கள், ஆளுமைகளை என் பயணத்தின் ஊடாக கிடைத்த தகவல்களை ஒருங்கிணைத்து வழங்கியிருக்கிறேன். இந்நூலில் வரும் ஆளுமைகள், திட்டங்கள் எந்த குறிப்பிட்ட வரிசையிலும் அமையவில்லை, இதில் மேல் கீழ் என்றோ, முக்கியம் என்றோ திட்டமிடவில்லை. தகவல்கள் வந்த வரிசையில் அப்படியே பதிவிட்டப்பட்டுள்ளது.