எல்லாவித வளங்களுடனும் வாழ்கின்ற ஒருவன் குறிப்பிட்ட ஓர் இடத்தில் புதையல்
இருக்கிறது என்றால் அது பற்றி அதிகம் கவலைப்பட மாட்டான். ஒரு சமுதாயத்தின்
புதையல் என்பது அந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் தேடி வைத்த இலக்கியம்
முதலியனவே ஆகும். இதை அல்லாமல் பணம், காசுதான் முன்னோர்கள் தேடி
வைத்தார்கள் என்றால் அது பெரும்பாலும் மூன்று தலைமுறைக்கு மேல்
நீடிப்பதில்லை. செல்வ வளம், அதிகார வளம் முதலிய அனைத்தும் நிறைந்திருந்த
எகிப்திய, மெசப்பட்டோமிய, சுமேரிய, சீன, கிரேக்க, உரோம நாகரிகங்கள் அத்தனி
வளங்களைப் பெற்றிருந்தும் இன்று பொய்யாய்க் கனவாய் மெல்ல மறைந்துவிட்டன.
ஆனால் கிரேக்க இலக்கியம், சீன இலக்கியம், இலத்தீன் மொழி இலக்கியம் என்பவை
இன்றும் உள்ளன.