பல துறைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அவற்றில்
முக்கியமானது, ரியல் எஸ்டேட். கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
வழங்கிவரும் ரியல் எஸ்டேட் துறை இப்போது பெரும் சிக்கலில்
மாட்டியிருக்கிறது. ``கொரோனா காலத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை
எப்படியிருக்கும்?’’ என்று அந்தத் துறை சார்ந்தவர்களிடம் கேட்டோம். விரிவாக
எடுத்துச் சொன்னார்கள். வீடு வாங்குபவர்கள் மத்தியில் அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை பெரிதாக
இருப்பதால், `இப்போது வீடு வாங்குவது, முதலீடு செய்வது சரியாக
இருக்குமா...’ என்று யோசிக்கிறார்கள். சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு
போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் நிலையற்றதன்மையால் ரியல் எஸ்டேட் முதலீடு
குறித்த முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறார்கள். வீடு வாங்க, பெரிய அளவில்
முதலீடு வேண்டும் என்பதால் முன்பணம் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்கள்
தொடங்கி, புதிதாக வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் வரை அனைவரும்
குழப்பத்திலிருக்கிறார்கள்.