பிளஸ் 2 தேர்வில், மாணவர்களின், 'டாப்' மதிப்பெண் மற்றும், 'சென்டம்'
பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், பெற்றோரும், மாணவர்களும் நிம்மதி
அடைந்துள்ளனர். பாடங்களை புரிந்து படித்தவர்கள், அதிக மதிப்பெண்
பெற்றுள்ளனர். இதன்மூலம், மனப்பாடம் செய்து, விடைத்தாளில் துப்பும்
பழக்கத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, மாணவர்களின்
அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளதால், கல்வியாளர்கள் மிகப்
பெரிய மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு ஆண்டும்,
எத்தனை மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றனர்; அதிக மதிப்பெண் பெற்ற
பள்ளிகள் எத்தனை என்பது போன்ற, விபரங்கள் வெளியிடப்படும். அதிக மதிப்பெண்
எடுத்த மாணவ - மாணவியரை பாராட்டுவதும், அவர்களை ஊடகங்களில், 'ஹீரோ' போல்
காட்டுவதும், வழக்கமாக இருந்தது.இதை பார்க்கும் பெற்றோரும், மாணவர்களின்
உறவினர்களும், தங்கள் குடும்பத்தில் மதிப்பெண் குறைந்த, மாணவர்களை
திட்டுவதும், அவர்களை ஏளனமாக பார்ப்பதும், பெரும் வேதனை அளிக்கும்
சம்பவங்களாக இருந்தன. பிளஸ் 2வில், 'டாப்' மதிப்பெண் பெற்றால் மட்டுமே,
எதிர்காலம் நன்றாக இருக்கும். மற்றவர்கள் வாழவே தகுதியில்லாதவர்கள்
போன்றும், சில பெற்றோரும், சமூகமும் கருதி வந்தன.இந்த சூழலால், மதிப்பெண்
குறைந்த பல மாணவர்கள், பெற்றோர், உற்றார், உறவினரின் ஏச்சு, பேச்சுகளுக்கு
பயந்து, தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்தனர். இதை கட்டுப்படுத்தும்
வகையில், புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வி துறை அறிமுகம்
செய்தது.அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், பள்ளி கல்வி செயலராக
இருந்த உதயசந்திரன், பள்ளி கல்வி இயக்குனராக இருந்த இளங்கோவன், தேர்வு துறை
இயக்குனர் வசுந்தராதேவி ஆகியோர், ஆலோசனை நடத்தினர். முடிவில், பிளஸ் 2
பொது தேர்வில், 'டாப்பர்' மற்றும், 'சென்டம்' எனும் நுாற்றுக்கு நுாறு
மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படாது என, அறிவித்தனர்.