குடும்பமாக சேர்ந்து தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றி, நாளிதழ்களில்
வந்த செய்திகள் தந்த அதிர்ச்சி தான், இந்தக் கட்டுரையை எழுத
வைத்தது.குடும்பப் பிரச்னையால், தங்கள் குழந்தைகளை கொன்று, தாங்களும்
தற்கொலை செய்து கொள்கின்றனர், சில பேர். தங்களுக்கு பின் குழந்தைகள்
கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, ஒன்றும் அறியாத அப்பாவிக் குழந்தைகளைக்
கொல்வதற்கு, எப்படி மனம் துணிகிறது... ஏதேதோ காரணங்கள், பல விதமான
வலிகள்.... ஐயோ, கொடூரம்!பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகள், கண் முன்
துடிதுடித்து சாவதைப் பார்க்கும் அசாத்திய தைரியம் கொண்டவர்கள், அந்தத்
துணிச்சலை, பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவதில் காட்ட வேண்டியது தானே?நம்
அன்புக்குரியவர்கள் படும் வேதனையை, அருகிலிருந்து பார்ப்பதை விட, பெரிய
கொடுமை, தண்டனை வேறில்லை. இதை விடவா, வாழ்க்கை உங்களை துன்பப்படுத்தி விட
முடியும்?இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்து விட்ட கோபத்தில், கணவனும், அவன்
வீட்டாரும் பார்க்க வரவில்லை என்பதால், பிஞ்சுக் குழந்தைகளை, பால்
குடிக்கும் போதே, மார்பில் அழுத்தி, மூச்சு திணறடித்து கொன்று விட்டாள்,
ஒரு நவீன பூதகி. பட்டதாரியான அவள், ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று கூட,
கணவனின் துணையின்றி, அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி இருக்கலாம்.இதெல்லாம்
விட, கள்ளக் காதலுக்காக, பெற்ற குழந்தைகளைக் கொல்வது, மன விகாரத்தின்
உச்சம். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில், இரு குழந்தைகளை கொன்று,
பிரியாணி கடை ஊழியனுடன் ஓட நினைத்த அந்த இளம்பெண், தன் இரு குழந்தைகளையும்
கொன்ற கொடூரத்தை, பத்திரிகைகளில் படித்த எனக்கே, மனம் பதறி போகிறதே...
எப்படி அவளால், எவ்வித பதட்டமும் இன்றி, கொலை செய்ய முடிந்தது?இத்தகைய,
பெண் பேய்களுக்கு, உடனடியாக சட்டத்தின் மூலம் கடுமையான, அதிக பட்ச தண்டனை
வழங்க வேண்டும்.'ஆண்டாண்டு காலம், அழுது புரண்டாலும், மாண்டார் மீண்டு
வருவதில்லை' என்றார், பட்டினத்தார்