book

ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

பதினேழு பதினெட்டு வயசில் கதை எழுத வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. நானும் எழுத வேண்டும். எல்லா பத்திரிகையிலும் என் பெயர் கொட்டை எழுத்தில் போட்டு கதை வர வேண்டும். இலக்கை நிர்ணயித்தாயிற்று. அதை அடைந்தே தீருவதென்று முடிவு பண்ணினேன்.அப்போதுதான் தினத்தந்தியில் அந்த விளம்பரம் பார்த்தேன். புதிதாகத் துவங்கும் மாதப் பத்திரிகையில் எழுத எழுத்தாளர் தேவை. குன்னூர் முகவரி போட்டிருந்தது. வயசான காலத்தில் பையனின் ஆதரவில்லாமல் அவதிப்படும் ஒரு தாயைப் பற்றி சின்னதாய் ஒரு கதை எழுதி அனுப்பி வைத்தேன். கதை அமைப்பு, வர்ணணை எல்லாமே கொஞ்சம் மட்டமாய்த்தான் இருந்தது. (பின்னாளில் அதே கருவை எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுதி அந்தக் கதை குமுதம் ஸ்பெஷலில் வெளிவந்தது.)இவர்களுக்கு வந்த மற்ற கதைகள் எல்லாம் அதை விட மட்டம் போலும். அடுத்த வாரமே எனக்கு லெட்டர் வந்தது. கதை மிகவும் அருமை. முதல் இதழில் உங்கள் கதையைத்தான் வெளியிடப் போகிறோம். புத்தக வெளியீட்டு விழா அடுத்த மாதம் பதினெட்டாம் தேதி. விழாவுக்கு அவசியம் வரவும். வெண்ணிலா என்ற பெண் கையெழுத்துப் போட்டிருந்தார். பதினேழரை வயசுப் பையனுக்கு வந்த வாழ்வைப் பாரேன் ! எழுத்தாளர் ஆவது இத்தனை சுலபமா?அப்பாவிடம் பஸ்ஸுக்கு காசை வாங்கிக் கொண்டு குன்னூர் போனேன். ஒரு காது குத்து மண்டபத்தில் முப்பது பேருக்கு மத்தியில் எனக்கு மாலை போட்டு கை தட்டினார்கள். வெண்ணிலா மைக்கில் இவர் நெருப்பு, புயல் என்றெல்லாம் என்னைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். நான் அப்படியே சந்தோஷத்தில் மேகம் போல மிதக்க ஆரம்பித்தேன். சாணித் தாளில் வெளியிடப்பட்ட அந்த பல்சுவை (?!) மாத இதழ் 32 பக்கங்களில் அச்சிடப்பட்ட கோயில் நன்கொடைப் புத்தகம் மாதிரித்தான் இருந்தது. பெயரை அச்சில் பார்த்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் மனசின் ஒரு மூலையில் லேசான அரிப்பு. இதை எத்தனை பேர் வாங்கிப் படிக்கப் போகிறார்கள்?இந்த மாதிரி லாஜிக்கல் கேள்வி கேட்டு எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க விடாத மனசாட்சியைத் தட்டுத் தட்டி உட்கார வைத்து விட்டு - வெண்ணிலா அண்ட் கோ-விடம் பிரியா விடை பெற்றேன். மத்தியான பஸ் பிடித்து - வீடு வந்து சேர்ந்ததும் - மாலை மரியாதை எல்லாவற்றையும் சொல்லி அம்மா, சித்தி, மாமா, தங்கை எல்லாரையும் வாய் பிளக்க வைத்தேன். அப்பா மட்டும் நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்தார்.