அவளுக்கு ஏழு - எட்டு வயது வயது இருக்கும். நல்ல பொன்னிறம். தங்கத்தில் செய்த சிலை போல இருந்தாள். அந்தக் காலை வெயிலில் அவளுடைய பொன் மேனி தகதக என்று மின்னியது. "மூக்கும் முழியும்" தங்கத்தில் பதித்த வைரங்களைப் போல இருந்தன. நல்ல பட்டுப் பாவாடை-சட்டை. குட்டி “கிளியோ பாட்ரா” என்று கூறலாம்! அவள் எவ்வளவு அழகாக இருந்தாளோ, அவ்வளவு குழப்பம் அவள் முகத்தில் காணப்பட்டது. கண்களில் ஒருவகைக் கலவரம். மருட்சியுண்ட மான்குட்டி போல அவள் காணப்பட்டாள்.