அன்று கந்த சஷ்டி என்பதால் ரோஜாப்பூ மாலை களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. இளம்பெண் மாலதி தன்னுடைய 'ஹெரால்டு' காரில் ஏறிக்கொண்டு சென்னை நகரிலுள்ள முக்கியமான பகுதிகளில் எல்லாம் சுற்றிய போதிலும் அவளுக்குத் திருப்தியளிக்கும் விதத் தில் மாலை கிடைக்கவில்லை. பதினைந்து லிட்டர் பெட்ரோல் செலவழிந்து, உடலுக்கும் உள்ளத்துக்கும் சோர்வு கிடைத்ததுதான் அவள் கண்ட லாபம். காரின் முன் ஆசனத்திலும், பின் ஆசனத்திலுமாக உட்கார்ந்திருந்த அவளுடைய கல்லூரித் தோழிகள் சிரித்துச் சிரித்துப் பேசி கும்மாளம் போட்டுக்கொண் டிருந்தார்கள் காரை மாலதியே ஓட்டிக்கொண்டிருந் தாள். அந்த அரட்டை வால்களின் பேச்சில் பங் கெடுத்துக்கொள்ள அவள் முன் வரவில்லை. எங்கே போனால் நல்ல மாலையை வாங்க முடியும் என்ற சிந்தனைதான் அவளுக்கு இருந்தது.