அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த டாக்டர் சிதம்பரம், தொடர்ந்து டெலிபோன் மணி ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு எழுந்து உட்கார்ந்தார். தூக்கம் முற்றிலும் கலைந்து விடாததால் கண்களைச் சுழற்றியது. ஒருவிதமான தள்ளாட்டமும் ஏற்பட்டது. இந்த நள்ளிரவில் நீண்ட நேரமாக டெலிபோன் செய்வது யாராக இருக்கக்கூடும் என்ற சிந்தனை எழுந்தபோதிலும், எதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மேஜையின் மீதிருந்த டெலிபோன் ரிசீவரை எடுத்து காதோடு பொருத்திக் கொண்டு, “ஹலோ... டாக்டர் சிதம்பரம் பேசுகிறேன்" என்று சொன்னார். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குமேல் டெலிபோன் மணி அலறுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக் கூடும் என்றது, அவருடைய மனம்.