பூசாரிக் கிழவியான கன்னியம்மாவுக்கு ஆவேசமான வெறி வந்துவிட்டது. கொடுவாளைக் கையில் தூக்கிக் கொண்டு 'நீலி...' என்று ஓங்காரக் கூச்சல் போட்டாள். பலி கொடுப்பதற்குத் தயாராகக் கொழுத்த ஆடுகள். செஞ்சேவல் - கோழிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மோகினிப்பாறை என்ற கிராமத்தின் வடக்கு எல்லையில் சக்தி வாய்ந்த ஒரு தேவதையின் கோயில் இருந்தது. அதுதான் நடுக்காட்டு நீலி. அந்த தேவதைக்கு இரத்தப்பலி கொடுக்கவே இப்படி ஒரு நள்ளிரவு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்து அங்கே கூடியிருந்தார்கள். ஆடு கோழிகளை வெட்டிப் பலி கொடுக்கும் காட்சியைப் பார்ப்பதில் ஒவ்வொருவருக்கும் கொண்டாட்டமாக இருந்தது. அது மோகினிப் பாறைக் கிராமத்து இளைஞனான மோகனின் கைங்கர்யம். லாட்டரிச் சீட்டில் பத்து லட்சம் பரிசு பெற்றதற்காக ஆடு, கோழிகளைக் காவு கொடுக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தான்.