மணி, மாலை ஐந்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. இன்னும் கருணாவைக் காணோம். சாதாரணமாக நான்கு அல்லது நான்கு ஐந்துக்கு வீட்டிலிருக்கும் பெண். என்னவாயிற்று? இட்லியை அவித்து, சட்னியை அரைத்து, இரவு வெங்காய சாம்பார், உருளைக்கறி என்று எல்லாமே செய்தாகி விட்டது. இன்னும் பெண்ணை மட்டும் காணோம். சாதாரணமாக மாலை டிபன் முடியும் போதே உள்ளே நுழையும் பெண். "அப்பா...! சாம்பார் வாசனை தூக்குதே" என்றபடியே சப்புக் கொட்டிக் கொண்டே வரும் பெண்ணைக் காணோம். இட்லி, தோசை போன்ற டிபன் வகையறாக்களுக்கு சட்னி சாம்பார் இருந்து விட்டால் போதும் ஒரு ஏழு, எட்டு கூட உள்ளே தள்ளுவாள். உள்ளே நுழையும் போதே 'பசிக்குது...' என்றவாறே நுழையும் பெண். இன்று ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டதே? ஆளையே காணோமே?