பெண்மையைப் போற்றுவோம்! - "பெண்கள் நாட்டின் கண்கள்" என்பார்கள். நாட்டுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் பெண்களே கண்கள். ஒரு வீட்டின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் "மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா" என்று பாடினார்கள். உண்மைதான்! பெண்ணாகப் பிறந்திடத் தவம் செய்திருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால், வயிற்றில் வளருவது பெண் என்று தெரிந்ததும் கருவிலேயே அழித்துவிடுவார்கள்! தப்பித் தவறிப் பிறந்துவிட்டாலோ, தாய்ப்பால் கிடைக்காது, கள்ளிப் பால்தான் ஊற்றப்படும்! கருவறையிலிருந்து நேராகக் கல்லறைக்குப் போக வேண்டிவரும்! இந்த அவல நிலையில், ஒரு குடும்பத்தில் நான்கு பெண்கள். அந்தப் பெண்களைப் பின்னணியாகக் கொண்ட பெருங்கதைதான், இது. இன்றையப் பெண்களின் பிரதிநிதிகளாக அந்த நான்கு பெண்களும் விளங்குகிறார்கள். இரண்டு பெண்கள் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள், ஒருத்தி ஆண்(சக)வாசமே கூடாது என்று தனித்து வாழுகிறாள். மற்றொருத்தி, அரசியல்வாதி ஆகிறாள். இன்றைய சமுதாயத்தில் நாம் காணும் பெண்கள்தான் இவர்கள். இவர்களின் வழியே இன்றைய சமுதாயக் கேடுகளை, பெண்களின் அவதிகளை, அரசியலின் அவல நிலையை எடுத்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.