ஏற்கனவே வெளிவந்த தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், நதியின் கரையில், துங்கபத்திரை ஆகிய நூல் களைப்போலவே அழகான அனுபவக்கட்டுரைகளைக் கொண்ட தொகுதியாக ‘ஒன்பது குன்று' அமைந்திருக்கிறது. நீண்ட காலமாக மூடியே வைத்திருந்த பெட்டியைத் திறந்து பழைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தொடர்பான நிகழ்ச்சிகளில் மனம் மூழ்குவதுபோல பாவண்ணனின் அனுபவக்கட்டுரைகள் வாசகர்களை ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்த்துகின்றன. ஒருபோதும் சுமையாக இல்லாத நினைவேக்கம் இது. வருத்தமும் துயரமும் இல்லாதது.
ஒவ்வொரு கட்டுரையும் பனித்துளியில் பனைமரத்தின் பிம்பத்தைக் காண்பதற்கு இணையான அனுபவம். பிறர் மிக எளிதாகக் கடந்து போகும் ஒரு தருணத்தில் கூட அரிய மனிதர்களையும் அரிய நிகழ்ச்சிகளையும் பாவண்ணனின் கண்கள் கண்டடைகின்றன. அந்த ஆற்றல், எல்லாத் தருணங்களையும் அழகான சொற்சித்திரங்களாக கலையழகோடு தீட்டுவதற்கு பாவண்ணனுக்கு உறுதுணையாகத் திகழ்கிறது.