book

தொலைந்து போனவர்கள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. கந்தசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788119034994
Add to Cart

எல்லோருக்கும் பால்ய பருவம் இருக்கிறது. பால்ய கால நினைவுகள் பசுமையாக நினைவில் உள்ளன. அது தானாக மனத்தில் ஏறியது. அது அறிவால் அறிந்து மனத்தில் ஏற்றத்தக்கதென ஏற்றப்பட்டதில்லை. அதனால் பால்யகால நினைவுகள் வயது ஏற ஏற அர்த்தம் கொள்கின்றன. அது தான் வாழ்க்கை.
சிறு கிராமத்தில் எளிய நான்கு ஆரம்பப் பள்ளிக்கூட மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து படிக்கிறார்கள். ஒரு ஊர்க்காரர்கள். சொந்தமல்ல. ஆனால், அதற்கு மேல் ஒன்றாக சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். வயது ஏறுகிறது. பள்ளிக்கூட படிப்பு முடிகிறது. தேர்வு எழுதுகிறார்கள். இரண்டு பேர் பாஸ் ஆகிறார்கள். இரண்டு பேர் பெயிலாகிப் போகிறார்கள். வேலை தேடி வெளியூர் செல்கிறார்கள். நான்கு பேர்களுக்கும் ஆளுக்கொருவிதமாக வேலை கிடைக்கிறது. அதன் போக்கில் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அப்படியே வாழ்கிறார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகப் போய்க்கொண்டே இருக்கிறது.


நால்வரில் ஒருவன், பத்தாவது வகுப்பில் பெயிலானவன், வாழ்க்கையில் பலவிதமான வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வசதியாக கார், பங்களா என்று இருக்கிறான். அவன் ஒருநாள் எதிர்பாராதவிதமாக தொழிலாளர் ஊர்வலம் ஒன்றில் தன் பால்யகால சிநேகிதனைச் சந்திக்கிறான். அவன் வழியாக மற்ற சிநேகிதர்களையும் கண்டுபிடிக்கிறான். அவனுக்குத் தன் பால்யகால நினைவுகள் வருகிறது. பள்ளி கடைசி நாளன்று எடுத்துக்கொண்ட போட்டோவை வீட்டில் மாட்டிவைத்திருப்ப தாகவும், அடிக்கடி அதைப் பார்த்து பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதாகவும் சொல்கிறான்.


தன் பால்யகால சிநேகிதர்களைச் சந்தித்துப் பேசப்பேச அவனுக்கு பழைய நாட்களே நினைவிற்கு வருகின்றன. ஆனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன விதமாக வாழ்கிறார்கள் என்பதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், தன் வீட்டிற்கு அழைக்கிறான். இரண்டு பேர்கள் முதலில் அவன் விருந்தைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவன் கட்டாயப்படுத்துவதால் விருந்துக்கு வர விருப்பம் தெரிவிக்கிறார்கள். அவனைப் போல் பத்தாவது பெயிலாகி, மிலிட்டரிக்குச் சென்று பணியாற்றிவிட்டு வாட்ச்மேனாகப் பணியாற்றுகிறவன் விருந்துக்கு சந்தோஷமாக வருகிறான். மற்ற இரண்டு சிநேகிதர்களும் விருந்துக்கு வரவில்லை. அவன் காத்துக்கொண்டிருக்கிறான்.


1983 ஆம் ஆண்டில் தொலைந்து போனவர்கள் நாவலை, சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் அமர்ந்து எழுதினேன். முதல் அத்தியாயத்தை ஐந்தாறு முறைகளுக்கு மேல் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல் எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மறுபடியும் மறுபடியும் எழுதினேன். கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி அதனை வெளியிட்டார்.


தொலைந்து போனவர்கள் - நாவலில் கேள்வி என்பது மனிதர்களுக்கான கேள்விதான். பால்யகால சிநேகிதம் எதன் பொருட்டு நொறுங்கிப் போகிறது. யார் அதனைத் தொலைக்கிறார்கள். கேள்விக்கான பதில் நாவலில் இல்லை. ஆனால், சொல்லப்பட்ட கதையின் வழியாக சொல்லப்படாத பதிலை தங்கள் அளவில் சொல்லிவிடலாம் என்பதுதான். அசலான நாவல் தீர்வு சொல்வது இல்லை, ஏனெனில் வாழ்க்கை என்பது வாழ்வதுதான். அதனையே தொலைந்து போனவர்கள் நாவல் சொல்கிறது.


எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் சில பகுதிகள் தொலைந்து போனவர்களிடமும் இருக்கிறது. அதுதான் முக்கியம். அதில் ஆண்கள் வாழ்க்கைதான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதால் பெண்கள் வாழ்க்கை இல்லையென்பது இல்லை. வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பொதுவான அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருப்பதுதான். அதனை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.


1992 ஆம் ஆண்டில் சென்னை தூர்தர்சனில் 13வது தொடராக தொலைந்து போனவர்கள் ஒளிபரப்பப்பட்டது. பெரிய அளவில் மாற்றம் ஏதும் கிடையாது. நாவலையொட்டியே சில காட்சிகள் சேர்க்கப்பட்டன, தொடர் பெரும் வெற்றி பெற்றது. சொல்லப்பட்ட கதையின் வழியாகச் சொல்லப்படாது தொலைந்து போனவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அளவில் அடையாளம் கண்டுகொண்டார்கள், கதையே இல்லாத நாவலான தொலைந்து போனவர்கள் சொல்லப்பட்ட மனிதர்கள் இல்லை. வாசிக்கிறவர்கள்தான் என்று சொல்ல வேண்டும். எழுதி மாளாத மனிதர்கள் கதையில் ஓர் அம்சம். அது எழுதவும் படிக்கவும் காரணமாக இருக்கிறது.


தொலைந்து போனவர்கள் முப்பதாண்டு காலமாகத் தமிழ் வாசகர்களால் படிக்கப்பட்டு வருகிறது. எனது நாவல்களில் ‘தொலைந்து போனவர்கள்’ எனக்குப் பிடித்தமான ஒன்று. காரணம், நான் அதில் அதிகமாக இல்லை. ஆனால், நானும் மற்றவர்கள் போல் வந்து போகிறேன்.