ஒரு நாள், தேவி மூகாம்பிகை ஆதி சங்கரர் முன்பாகத் தோன்றி வேண்டிய வரத்தைக்
கேட்குமாறு பணித்தார். அதற்கு ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின்
சிலையை பிரதிஷ்டை செய்து, மக்கள் அனைவரும் வழிபாடு செய்வதற்கு, ஒரு கோயில்
கட்டி வழிபட விரும்புவதாகக் கூறினார். அதற்கு தேவி ஒரு நிபந்தனையுடன்
ஒத்துக்கொண்டார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும் என்றும்,
குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது எனவும்
கட்டளையிட்டார். அதனால் ஆதி சங்கரர் முன்னே சென்றார். மூகாம்பிகை தேவி
சங்கரரை சோதிக்க விரும்பியதால் தன் காலில் அணிந்த "கொலுசுகளின்" சலங்கை
சத்தத்தை கேட்காதவாறு நிறுத்தினார். சலங்கை சத்தம் கேட்காததால் நிபந்தனையை
மறந்து சங்கரர் திரும்பிப் பார்த்தார். அங்கு தேவி மூகாம்பிகை சிலை வடிவில்
உருமாறி விட்டார். அந்த இடமே தற்போதைய "கொல்லூர்" ஆகும். கோயில்
கட்டப்பட்ட இடமானது ஆதி சங்கரர் தவமியற்றிய இடமாகும். மற்றும் தேவி
மூகாம்பிகை சங்கரருக்கு காட்சியளித்த இடம் கோடாச்சத்ரி மலை உச்சி ஆகும்.
இது கொல்லூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இம் மலையின் உச்சியை
கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் வெளிப்புறத்திலிருந்து காண முடிகிறது.