நவக்கிரக மூர்த்திகளில் சனிபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். ஈஸ்வரனுக்கு சமமாக அவருக்கு மட்டுமே ஈஸ்வரப்பட்டம் இருக்கிறது. அதனாலேயே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார்.கோவில்களில் நவக்கிரகப் பிரதிஷ்டை இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் சனீஸ்வரன் பிரதிஷ்டை இல்லாமல் இருக்காது. உயர்ந்த மேடை ஒன்றில் அவரது பிரதிஷ்டை அமைந்திருக்கும்.மன்னாதி மன்னர்கள் என்றாலும் சனிபகவானை வழிபடாதவர்களே இல்லை. சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டே தசரத மகாராஜா பலகாரியங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். புரூவரசு சக்கரவர்த்தியும், நளச்சக்கரவர்த்தியும் சனிபகவானை வழிபட்டே புகழும், சிறப்பும் எய்தி ஆட்சி செய்திருக்கிறார்கள்.
சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டு அவரது அருளைப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்தும், சிறந்தும் விளங்குவர். சனிபகவான் என்று சொன்னவுடனேயே நம் சிந்தையில் அருள்மிகு திருநள்ளாற்று உறை சனிபகவானின் நினைவே தோன்றும்.