தமிழ்த் திரை வரலாற்றில் கவிஞர் என்பதின் தொடர்ச் சொல்லாக வருவது கண்ணதாசன்! தெரியாமல் போன வேதாந் தத்தை திறம்பட பாமரனிடம் கொண்டு சேர்த்த பெருந்தகையாளர் இவரே!சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அசைக்க முடியாத ஆளுமையாக கவிதை உலகில் கோலோச்சியவரும் இவரே!'
பிறப்பு. வளர்ப்பு. சடங்கு. சம்பிரதாயம், காதல், காமம். திருமணம், வாழ்க்கை, உறவு, பிரிவு, வெறுப்பு. அமைதி, தத்துவம். மரணம் என்று அவர் தொடாத எல்லை இல்லை! இவரது படைப்புகள் அனைத்துமே நம் ஆன்மாவை வருடி விடுபவை. நம் ஆன்மாவுக்குள் ஓயாது அடித்து அலைக்கழிக்கும் அலையும் அவரே. நம் ஆன்மாவுக்குள் அமைதியை நிலவச்செய்யும் ஆழ்கடலும் அவரே!.
"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமாற் போனாலே வேதாந்தம்" மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி. என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி" சித்தர்கள் அத்தமாய்க் கூறிய தத்துவங்களையும், வேதத்தின் அந்தங்களையும் குறிப்பிட்டு, தன்னையே உணர்ந்து கொண்டு ஞானம் பெறும் குறிக்கோளை அழகாய்க் குறிப்பிடு கிறார் கவிஞர்!ஆயிரம் வேதங்களைக் கற்றாலும், தன்னை உணரும் வரை ஞானமில்லையென்பது அனைத்து தத்துவ ஞானிகளாலும் போதிக்கப்பட்ட பாடம்தான். ஆனால் அது பாமரணை எட்டாத நிலையில், அதையே " உன்னை அறிந்தால், நீ உலகத்தில் தலை வணங்காது போராடலாம்" என்று எளிய தமிழில் எடுத்துரைத்தவர் இந்தக் கண்ணதாசன்!