நம் சிந்தனையின் பிம்பமாக செயலின் வடிவமாக சாதனையின் அடையாளமாக இருக்கிறோம். சிந்தனையில் இருந்துதான் அறிவு தோன்றுகிறது. அது பண்பட்ட பல கேள்வி களை எழுப்பி விடை காண வைக்கும்.
ஏன் எதற்கு எப்படி என்ற வினாவை எழுப்பி அறிவைப் பயன்படுத்தச் செய்யும். சிந்தனை இல்லா விட்டால் உலகத்தில் இயங்குகின்ற சக்தியே இருக்காது. சிந்தனையின் மூலமே முன்னேற்றம் காண முடியும்.ஒன்றைப் பற்றி தொடர்ந்து எண்ணிக் கொண்டிருப்பதும், ஆராய்ந்து கொண்டிருப் பதும் தான் சிந்தனை. இதன் மூலம்தான் செயலைச் செய்ய முடியும். சிந்தனை தான் நமது வாழ்வின் அஸ்திவாரம். வாழ்வே இதனால் தான் ஆக்கப்பட்டது என்கிறார் புத்தர்.நாம் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் மனிதர்களுடைய சிந்தனையிலிருந்து பிறந்தது தான். அவர்களுடைய சிந்தனையே செயலாக மாறி கண்டுபிடிப்புகளாகத் தோன்றின.நாம் யாராக இருந்தாலும் எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் சிந்தனையை உயர்வாகக் கொண்டிருக்க வேண்டும். சிந்தித்துச் செயல்படுவதின் மூலமே சிறப்பாக வாழ முடியும்.
சிந்தனை மட்டும் இருந்து செயலைச் செய்யாவிட்டால் அதனால் எந்தவித பயனும் ஏற்படாது. ஜப்பான் நாட்டின் மேன்மையான வளர்ச்சிக்குக் காரணமே அந்த தேச மக்களின் உயர்வான சிந்தனைதான்.