முதலில் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு
பேசிய அவர்கள் பேச்சு வளரவளரத் 'தங்களில் யாருமே முதல் நாளிரவு
நிகழ்ச்சிக்குக் காரணமில்லை' என்ற திடுக்கிடத்தக்க உண்மையைப் புரிந்து
கொண்டனர். இறுதியில் முன் இரவில் கலவரம் முடிந்து தாங்கள் கலைந்த
போதிலிருந்து குதிரை விற்பவர்கள் என்று கூறி வந்து தங்களோடு சேர்ந்து
கொண்டவர்கள் காணமாற் போனது வரை அவர்களுக்கு எல்லா நினைவும் வந்தன. 'குதிரை
வாணிகர்களாக வந்தவர்களே இந்தக் கலவரத்திற்குக் காரணம். அவர்கள் தருசகனாலேயே
அனுப்பப் பட்டிருக்கலாம்' என்று எண்ணியபோது தாங்கள் அவ்வளவு எளிதில்
சூழ்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டது அவர்களுக்கே வியப்பையும் வெட்கத்தையும்
அளித்தது. அவர்கள் அஞ்சினர். ஆத்திரங்கொண்டு மீண்டும் அங்கேயே ஒன்று கூடி
எழுந்தனர். அடக்க முடியாத ஆத்திரத்தோடு மறுபடி மகத நாட்டின் மீது படை எடுக்கத் துணிந்தனர்.