book

ஏழிலைக் கிழங்கின் மாமிசம்

Ezhilai Kizhangin Mamisam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சின்னசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969250
Add to Cart

"விமர்சகராக யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி ஒருவர் இருப்பதற்கும் சாத்தியமில்லையோ எனப் பல நேரங்களில் தோன்றுகிறது. இதுவரை எழுதப்பட்ட விமர்சனங்கள் எல்லாமே வாசக அனுபவங்கள்தாம். அந்த வாசக அனுபவங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவை என்றுதான் பார்க்க விரும்புகிறேன். முழுமையாகப் படிக்காமல் எழுதப்பட்ட விமர்சனங்களே தமிழ்ச் சூழலில் அதிகம். கவிஞர் சின்னசாமியின் ஏழிலைக் கிழங்கின் மாமிசம் என்னும் கவிதைத் தொகுப்பை வாசித்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறேன் என்பதும் வாசிப்பில் அடங்கும். எனக்கு இப்படித் தோன்றுகிறது என்பதாக எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரி என இலக்கியத்தில் எதுவும் இல்லை. யாரோடும் முட்டி மோதி என்ன ஆகப்போகிறது? சின்னசாமியின் கவிதையில் நேர்மையான அனுபவம் பதிவாகியிருக்கிறது. அனுபவத்தைப் பெருக்கும் எண்ணத்தால் உள்வெளியாகப் பயணித்து ஒரு புதிய வெளியின் மீது அவர் மனம் குவிகிறது. அங்கே அவர் பார்த்ததை உணர்ந்ததை வெளிப்படுத்த மொழி உதவுகிறது. அனுபவம், எண்ணம், மொழி ஆகிவற்றோடு மட்டும் ஒருவரின் எழுத்து தொடர்புடையதா அல்லது இவை எல்லாமும் கலந்த ஒன்றா? வாழ்க்கையில் இருந்துதானே ஒரு படைப்பை யாரும் தந்திருக்க முடியும்? வாழ்தல் சார்ந்ததாக எழுத்து இருக்கலாமோ? உயிரோடு இருப்பதால்தானே ஒருவர் வாழ முடிகிறது. ஆக இருத்தல்தான் முக்கியமானது. சின்னசாமியின் இருத்தல் எதைச் சார்ந்து இயங்குகிறது என்பதுதான் என் வாசிப்பில் என்னை அலைக்கழிக்கிறது. இதில் எனது நானும் பிரதானப் பங்கு வகிக்கிறது. சின்னசாமிக்குள் கவிதை வெளிப்படுவதற்கு முன்பு இருந்த உணர்வுநிலைமீது மனம் அக்கறைகொள்கிறது. கவிதைக்கு முந்தைய இடம் முக்கியமானதாகப் படுகிறது. வாசிப்பிலும் நம்மைத் தேடவைக்கிறது. கவிதைகளில் உள்ள வார்த்தைகளின் வழியாகத்தான் அதைத் தேட முடியும். இவரது சொற்களில் படிந்திருக்கும் சேற்றில் நாமும் கால் பதிக்கிறோம். கூதக்காற்றில் கொங்காணி போர்த்தி அவரோடு நாமும் நடக்கிறோம். ‘நொய்யலின் வாசனை’ கவிதையில் வரும் வார்த்தைகளை உள்ளங்கையில் வைத்து முகர்ந்து பார்க்கிறோம். ‘தெண்ணீர் நடுபாறைத்தீவில் பொச்சமர்த்தி’ என்ற வரியில் மிரள்கிறோம். ‘காற்றோடை தோற்றுவாய்த் தேடி/ மேலாடை கீறிச் சிதைக்கும் முட்புதர் நீக்கி/ உச்சிமீதேறி சரிவதில்லை எவரும்’ என்னும் வரிகளுக்குள் சின்னசாமியும் அவரது சந்ததியும் வாழ்ந்த மண்ணின் இடம் பிடிபடுகிறது. ‘மாண்டுபோய்க் கிடக்கிறான் மல்லாந்து’ என்று ‘நொய்யலின் வாசனை’ கவிதை முடியும்போது உலகின் இயற்கை வளங்களை அழிதொழித்த இடத்தில் நாமும் இருப்பதாக எண்ணி வெட்கப்படுகிறோம். ‘இப்போதும் கொதிகலனில் அவியும் கீரையாய்/ பச்சை நிறப் பசி நான்/ எருதுகளின் பின்னால்/ இடுப்பளவு சேற்றில் உழுததையும்/ கரங்கள் காய்க்க/ அருகு தோண்டியதையும்/ முகத்தில் வழியச் சாணிக்கூடையைத்/ தலைக்குமேல் உயர்த்திச் சுமந்ததையும்/ தேகம்கீறி உதிரம் வடிய/ பருத்தி மாரை சோளத்தட்டையோடு/ சுமந்து சுமந்து கோப்பு போட்டதையும்/ ... / சைரன் ஒலிக்கும் இந்தக் குளிர்வாகனம்/ என்னை எங்கு கொண்டு சேர்த்தபோதிலும்/ என் கிணற்றின் பாறைத்தூணில்/ கசியுமொரு ஊற்று’. மேற்சொன்னக் கவிதை, ‘நாற்காலியில் வெற்றொருவனாய் அமர்ந்திருக்கிறேன்’ எனத் தொடங்குகிறது. இது அவரது மனம் வேரூன்றியிருக்கும் இடத்தை நமக்குச் சுட்டிவிடுகிறது. அவரது இருத்தல் எதில் நிலைகொண்டிருக்கிறது என்பதை மேலுமான கவிதைகள் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. இவரது கவிதைகள் விரிக்கும் நிலத்தின் கருப்பொருளையும் உரிப்பொருளையும் நம்மால் எளிதாக அறிய முடிகிறது. நொய்யல் ஆறு உயிர் கண்ட இடத்தில் சின்னசாமியின் காலடித் தடங்கள் தெரிகின்றன. தாவரங்கள் அடர்ந்து திரட்டிய இருள் நீங்காத மலையில் பார்வை கொண்ட கண்கள். விலங்குகளின் வழித் தடத்தில் பயணம். பறவைகளின் சப்தம் நிறைந்த காற்றின் தீண்டல். ஆகாயம் கரைந்த ஆறு. சின்னசாமியின் மண் ஒரு காலத்தில் இப்படியாகத்தான் இருந்திருக்கும். இவரும் இவரது சந்ததியும் சொல்லிய ஆற்றின் நினைவுகள் வறண்டுபோகாதிருக்கிறது. இவரது உள்ளே இருக்கும் ஆறு மாசுபடாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது. நிகழ்கால இருப்பின் தீண்டல் இவரைப் புரட்டிப் போடுகிறது. பிரத்யட்ச நிலையில் பார்வைகொள்கிறது சின்னசாமியின் மனம். அனுபவம் உள் இறங்கிப் பயணிக்கிறது. தனது மண்ணை, ஆறை, ஆற்றின் வழித்தடத்தை இழந்த வலியின் வெளிப்பாடுகளாகத்தான் சின்னசாமியின் பல கவிதைகள் உள்ளன. இந்த இடத்திலிருந்துதான் அவர் எல்லா இடங்களுக்கும் செல்கிறார். ஒருவர் அதிகாரியாக இருக்கலாம். சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கலாம். அவை முக்கியமல்ல. எந்த இடத்தில் இருந்தாலும் அவரது உயிர் விரும்புகிற உணவை அவர் தந்தாக வேண்டும். உணவின் தரத்தை வெளியிலிருந்து ஒருவர் நிச்சயிக்க முடியாது. மண்ணில் வேரூன்றி நிற்க மனிதர்கள் எதையாவது செய்துகொண்டேயிருக்கிறார்கள். ஆனால் படைப்பாளியின் இந்தச் செயல் கலாபூர்வமாக ஒளிர்ந்தால் அவன் தவிர்க்க முடியாதவனாக ஆகிறான். ஆம் சின்னசாமியும் அப்படித்தான்.. கவிஞரின் மனம் வேரூன்றியுள்ள தளமும் அவர் சமூகத்தில் பணியாற்றும் இடமும் வெவ்வேறானவை. அவரது காக்கிச் சட்டை மனம் உடலோடு ஒட்டவில்லை. குடியானவனின் உடையோடுதான் அலுவலத்தில் அவரது மனம் அமர்ந்திருக்கிறது. ‘அவன் ஒரு மேலதிகாரி தான் / அவனுக்கு டெமில்டன் நூலகத்திடம் / உறவு இருக்கிறது’ என ஆரம்பிக்கும் கவிதை இறுதியில் இப்படி முடிகிறது. ‘டெமில்டன் நூலகத்தில் / சார்த்தரின் விடுதலையின் பாதையை / பக்கம் மடித்து வைத்திருக்கிறான் அவன்/ மேலதிகாரிக்கு வேலைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.’ பொதுவாகக் கவிதை பிரக்ஞைத் தெளிவோடு இருக்காது. புரியாமை என்று பேசுவதும் அதனால்தான். கவிதையின் சிறப்பே அந்தத் தெளிவின்மைதான். அனுபவம், பின்பு சாத்தியமாகும் எண்ணம் இரண்டும் அரூபமானவை. எண்ணம் கூட்டிச் சென்று நிறுத்தும் மனவெளியும் அரூபமானதுதான். இது முற்றிலும் உணர்தல் தளத்தில் நிகழ்வது. கலை வெளிப்பாடுகொள்வதற்கு முந்தைய நிலை இப்படியானது. ‘ஆமையோட்டில் முளைவிடும் தானியங்கள்’ என்ற தலைப்பில் இருக்கும் வார்த்தைகள் எல்லாவற்றிலும் கவிதை ஈரம் உலராதிருக்கிறது. உயிரின் இருத்தல் அதிர்வு கலா உருவில் பட்டுத் தெறிக்கிறது. வாசிக்கும்போது நம் முகத்திலும் அந்த ஈரம். ‘ஒரு செஞ்சோளம் அதன் இனிப்பை/ விளைவிக்கும்போது எனது/ கிழவி அந்த முரட்டுக் கிழவனை முத்தமிடுகிறாள்/ கிழவன் விரிசல் விட்டுக் காய்ந்துபோன விரல்களை/ அல்லது/ அவளது கருவை மழைக்காலத்தில்/ பெரும்பாறைகளை நகர்த்திய நிலத்தின்/ உதிரக்கசிவோடு விரும்புகிறான்/ அவளது சிசுவே தானியமென்கிறான்’ எனத் தொடங்குகிறது கவிதை. "