book

கனவு மெய்ப்பட வேண்டும்

Kanavu Meyppada Vendum

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :4
Published on :2010
Out of Stock
Add to Alert List

சாதாரணமாய் வீட்டிற்கு வந்ததும் தையல் மிஷினைப் பிரித்து எதையாவது தைத்துக் கொண்டிருக்கும் மகள், இன்று உடையைக்கூட மாற்றாமல், வெறித்துப் போன பார்வையுடன் தந்தையின் போட்டோ எதிரில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு மீனாட்சி பதறிப் போனாள்
“மிதிலா... ஒடம்புக்கு ஏதாச்சுமா? மொகம்கூட அலம்பிக்காம ஒக்காந்திருக்கியே!”
பதில் வரவில்லை.
மகளின் கூந்தலை மெல்ல வருடுகையில் அவள் விழிகளில் மெல்லிய ஈரம் படிந்தது.
குட்டி இளவரசியாய் வேளைக்கு ஒரு டிரஸ், நாளைக்கு ஒரு நகை என்று புள்ளிமானாய்த் திரிந்த என் மகள்...
சிரிப்பும் குறுகுறுப்புமாய்த் தந்தையின் செல்லக் குட்டியாய் மடியில் உட்கார்ந்து கதைகளாய்க் கேட்ட என் மகள் -
அழகுப் பெட்டகமாய்ப் பட்டுப் பாவாடை தாவணியில் பருவக் குயிலாய்ப் பாடித் திரிந்த என் மகள்...
மணல் வீடு சரேலெனச் சரிகிற வேகத்தில், அத்தனை ராஜவசதிகளும் தொப்பென விழுந்து சாம்ராஜ்யமே பூமிக்குள் அமிழ்ந்து போன கொடுமை!
மாதச் சம்பளத்திற்கு வேலைக்குப் போனால்தான் இரண்டு வயிறும் நிறையும் என்கிற இன்றைய நிலைமையை நினைக்கையில் வயிறு குப்பென்று சுருங்க, மீனாட்சி மகளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
“அப்பா ஞாபகம் வந்திடுச்சா, மிதிலா?”
அதற்கும் பதிலில்லை.
“போனதெல்லாம் போகட்டும்டி, குழந்தே... பழசை எல்லாம் குழி தோண்டிப் புதைச்சுட்டேன்... நீயும் எல்லாத்தையும் மறந்துடு.”
மிதிலா மெல்லத் தலையை உயர்த்தித் தாயைப் பார்த்தாள்.
அம்மா!
என் இனிய அம்மா!
எப்போதும் பட்டுப் புடவையும், இரட்டை வடமும், இடுப்பில் வெள்ளிச் சாவிக் கொத்துமாய் வளைய வந்த அம்மா.
அழகிய வட்ட முகத்தில் திலகமாய்க் குங்குமம் மின்ன, ரவிவர்மா ஓவியத்தில் வரும் பெண் தெய்வம் மாதிரி எழிலும் கனிவும் நிறைந்த அம்மா.
இதழ்களில் மிருதுப் பேச்சும் நளினப் புன்னகையுமாய் வீட்டை ஆட்சி செய்த அம்மா.
பெண்டாட்டி தாசன் என்று உலகமே சொல்கிற அளவுக்கு அப்பாவைத் தன் அன்பாலும் அழகாலும் கட்டிப் போட்ட அம்மா...
இன்றைக்கு வெள்ளைப் புடவையும் விபூதிக் கீற்றும் ஒட்டிப்போன முகமும் வறண்டு போன தேகமும் பலவீனப்பட்டுப் போன இருதயத்துடனும் நலிந்து நிற்கும் கொடுமை!
“அம்மா...” அடி வயிற்றிலிருந்து புறப்பட்ட ஒரு விம்மல் தொண்டை வழியே வெடித்துச் சிதற, அவள் தாயை இறுக அணைத்துக் கொண்டாள்.
விழிகள் நீரைப் பெருக்கின.
மீனாட்சி உணர்ச்சி வசப்பட்டவளாய் மகளின் கண்ணீரைத் துடைத்துச் சொன்னாள்.
“ஏம்மா அழறே? என் ராஜாத்தி. நீ ஏன் அழறே...? நம்மையெல்லாம் இந்த நெலைமைக்குக் கொண்டு வந்தானே சங்கரலிங்கம், அவன் அழணும். கதறணும்... அப்பாவைப் படுக்கைல தள்ளிச் சிறுகச் சிறுகச் சாகடிச்சானே, அவன் அழணும்டி மிதிலா... ஆனா... ஆனா... அவன் செழிச்சிட்டிருக்கானே... காரும் பங்களாவுமா கொழிச்சிட்டிருக்கானே!”
அவள் சரேலெனத் தாயின் பிடியிலிருந்து விலகினாள்.