book

தபுதாராவின் புன்னகை

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாமரைபாரதி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395285391
Add to Cart

1998ம் வருடம் ஒரு மழை நாளின் அதிகாலைப் பொழுதில் எங்கள் ஊர் தென்பெண்ணை நதியின் தரைப்பாலத்திற்கு அருகே அமைந்துள்ள கபிலர் குன்றின் பின்னால் இருந்த கண்ணாடி போன்ற தெளிவான நீர்த்தடத்தில் நீந்திக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்த கணம்தான் கவிதை முதன் முதலாக எனக்குள் வேர்பிடித்த கணம் என நினைக்கிறேன். வாசிப்பின் மீதான ஈர்ப்பை எனக்குள் விதைத்த எனது தந்தையின் புத்தக அலமாரியும், வீட்டுக்கு அருகே இருந்த செல்வி ஹோட்டலில் சிறுவர் மலருக்காகக் காத்திருந்த தருணங்களும் (அது தவறவிடப்படின் தாலுக்கா ஆபிசுக்குப் பின்னே இருக்கும் அண்ணாதுரை அண்ணனின் வீட்டில் வாங்கிப் படித்துவிட்டு கொடுத்துவிடுவேன்) பின்னர் எங்கள் ஊர் நூலகத்தில் கழித்த காலமும் தொடர்ச்சியான வாசிப்பின்வழி என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன. 2001ஆம் ஆண்டு வரை சல்லிகை நண்பர்களோடு இலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கிய என்னை பொருள்சார் வாழ்வும், திருமணமும், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளும் ஆட்கொண்டு நவீன இலக்கியத்திலிருந்து விலகியிருக்கச் செய்தன. ஆனால் வாசிப்பு மட்டும் தொடர்ந்தது.

"பொருள்கள் அவை போலவே இருக்கின்றன. ஆனால் அவை மறைந்துள்ளன, ஒரு கவிஞனாக எனது கடமை அவற்றைக் கண்டுபிடிப்பதுதான்” என்பார் போர்ஹே. அந்தவகையில் ஏற்கனவே இருப்பனவற்றை எனக்கு வாய்க்கப்பெற்ற மொழியில் கண்டடைந்திருக்கிறேன். சுமார் இருபது வருடங்களாகக் கவிதையில் ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்களையும் வகைமைகளையும் கண்டு உண்மையில் மிரட்சியோடிருந்தபோதுதான் தமிழ் இந்து திசை நாளிதழில் 2017இல் "மழை வனம்" கவிதை வெளிவந்தது. காலையிலேயே கண்டராதித்தன் அழைத்து "கவிதை நல்லா இருக்கு பாரதி, தொடர்ந்து எழுதுங்க" என்றார். அது உற்சாகமூட்டுவதாகவும் எழுதுவதற்கான நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது.

இதுவரை காலம் என்னும் எந்திரம், வாழ்வின் அர்த்தங்களையும் அர்த்தமின்மைகளையும் அபத்தமான வகையில் அரைத்து வெளியேற்றிய சக்கைகளும் மென்று துப்பிய எச்சங்களுமே இந்தக் கவிதைகள். இவற்றுள் தனிமை, நிராதரவான நிலை, இயற்கையின் வசீகரம், பால்யத்தின் நினைவுகூர்தல், உடல் குறித்த வலி, நவீன வாழ்வின் தவிர்க்கவியலாத நெருக்கடிகள், குடிமைச் சமூகத்தின் தார்மீகக் கோபம் ஆகியனவற்றையோ அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றையோ ஏதேனும் ஒரு வாசகர் தரிசனமாகக் காண்பார் எனில் இச்செயல்பாடு அர்த்தம் உடையதாகும் எனக் கருதுகிறேன். இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியான கவிதைகளை நானே வைத்திராத நிலையில் அவற்றை வழங்கிய கே.ஸ்டாலின், ஆரம்ப காலத்திலேயே என் எழுத்துக்கு உற்சாகமூட்டிய காலபைரவன், கவிதைகளை ஒழுங்குசெய்து தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் தத்தமது தொகுப்புக்கு அளிக்கும் சிரத்தையோடு உதவிய அசதா, கண்டராதித்தன் ஆகியோருக்குப் பிரியமும் அன்பும்.