book

களவு போகும் கல்வி

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நியாஷ் அகமது
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :32
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

கல்வியை வணிகப் பொருளாக்கும் சேவையில் வர்த்தகத்துக்கான பொது ஒப்பந்தத்துக்கு (GATS) இந்தியா கொடுத்த விருப்பங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரி எழுதப்பட்ட புத்தகம் இது.

பொதுக்கல்வி முறை முற்றிலும் அழிந்து, நமது கல்விக்கூடங்கள் வணிக வளாகங்களாக மாறும். கல்வி மேலும் தீவிரமாக விற்பனைக்குரிய சந்தைப் பொருளாகும். அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்று இந்தப் புத்தகம் கேள்வி கேட்கிறது.

அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் மீது நமக்கு ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் கல்வி பெறும் வாய்ப்பை அரசுக் கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. ஆனால், GATS ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில், அரசு கல்லூரிகளுக்கான மானியம் வெட்டப்பட்டு, ஏழை மாணவர்களுக்குக் கல்வி மறைமுகமாக மறுக்கப்படும்.

அந்நியக் கல்வி நிறுவனங்கள் உள்ளே வந்தால் கல்வியின் தரம் நிச்சயம் உயரும்தானே என்று நினைக்கலாம். உலக வங்கியின் அறிக்கையின்படி, நன்கு அறியப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், பின்தங்கிய நாடுகளில் தரமற்ற கிளைகளையே நிறுவியுள்ளன. உள்ளூர் கல்வி வியாபாரி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டால், அவர்களை எதிர்க்கப் பெயரளவிலாவது சட்டம் துணை இருக்கிறது. ஆனால், சர்வதேசக் கல்வி வியாபாரியை எதிர்க்க?

கல்வியிலும் பாடத்திட்டத்திலும் முற்போக் கான மாற்றங்களை மேற்கொள்ள ஏகப்பட்ட வாய்ப்புகளை நம் அரசியலமைப்பு வழங்கி யிருக்கிறது. ஆனால், GATS ஒப்பந்தத்தின் ஒரு சரத்துப்படி, அந்நிய நாட்டுக் கல்விப் பெருங்குழுமங்களின் பாடத்திட்டங்களில் நம் அரசால் தலையிட முடியாது. அவர்கள் இந்த நாட்டுக்கும் சூழலுக்கும் எதிரான கல்வியை வழங்கினால் கூட, நம் அரசால் எதிர்த்துக் கேள்வி எழுப்ப முடியாது. இது குறித்த யுனெஸ்கோ, சர்வதேச வணிக மையம், உலக வங்கி ஆகியவற்றின் அறிக்கைகளையும், தகவல்களையும் நியாஸ் அகமது மேற்கோள் காட்டுகிறார்.

இட ஒதுக்கீடு தவறு என்ற மனநிலையை மக்களிடையே ஏற்படுத்த அனைத்து மத்திய அரசுகளும் முயற்சித்துவருகின்றன. சிறிய போராக மட்டுமே இது நின்றுவிடாது என்று கூறும் ஆசிரியர், இதற்கான நீண்டதொரு பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கவலை தெரிவிக்கிறார். உணவு, உடை, பற்பசை போன்றவற்றைத் தாண்டி இப்போது கல்வியிலும் அந்நியர்களின் ஊடுருவலா என்று நியாஸ் அகமது கேள்விக்கணைகள் தொடுக்கிறார்.