book

கீர்த்திக்கோர் கிழவன் சேதுபதி

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சவுந்தர்ராஜன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :68
பதிப்பு :3
Published on :1995
Add to Cart

மாமன்னர் கிழவர் ரகுநாத சேதுபதி(கி.பி. 1671 முதல்1710 வரை) வரலாறு.
*************
கிழவன் என்பதற்கு உரிமைகொண்டவன் என்பது பொருளாகும்.
மறவர் சீமை எனப்படும் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதிகள்
என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் மிகவும் புகழ்ப்பெற்றவர் கிழவர் சேதுபதி எனப்படும் ரகுநாதசேதுபதியாவார்.
இம்மன்னனுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் போகலூரை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்தார்கள். ஆனால் கிழவர் சேதுபதிதான் தலைநகரை இராமநாதபுரத்துக்கு மாற்றியதோடு அங்கே கோட்டை கொத்தளங்களையும் எழுப்பினார். திருமயம் கோட்டை இம்மனரால் கட்டப்பட்டதே ஆகும்.

இராமநாதபுரம் கோட்டையில் சேதுபதியின் நண்பரும் செல்வந்தருமான வள்ளல் சீதக்காதியின்
நிதியுதவியோடு வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் இன்றும் கலைநயம் மாறாமல்
மின்னிக்கொண்டிருக்கின்றன.
கிழவர் சேதுபதி காலத்தில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் ஆவார். அவரது அரண்மனை ஊழியர்களே அவரை சிறை வைத்து விட்டனர். சொக்கநாதரின் தம்பியை மன்னராக்கினர். சொக்கநாதரை விடுவிப்பதாகக் கூறி கொண்டு மதுரைக்குள் நுழைந்த முகமதியப் படைத் தலைவன் ருதும்கான் சொக்கநாதரை விடுதலை செய்தான். ஆனால் அவரை அரண்மனையில் பொம்மை போல உட்கார வைத்து விட்டு ஆட்சியை தானே கையில் எடுத்துக்கொண்டான்.

சொக்கநாதரின் மனைவி ராணி மங்கம்மாள் தங்களுக்கு உதவிடுமாறு கிழவர் சேதுபதிக்கு கடிதம் எழுதினாள். பெருபடையுடன் மதுரை நோக்கி வந்த சேதுபதி ருதும்கானை கொன்று முகமதியப் படையை விரட்டினார்.
சேதுபதியின் வீரத்துக்கு மதிப்பளிக்க விரும்பிய சொக்கநாத நாயக்கர் இராமநாதபுரத்துக்கே சென்று இராஜமரியாதையுடன் மதுரைக்கு அழைத்து வந்தார். ஏராளமான பொன்னும் பொருளும்
கொடுத்து மரியாதை செய்தார்.

ஆனால் கிழவன் இரகுநாதசேதுபதி நாயக்க அரசுக்கு கட்டுப்படவில்லை . சுதந்திரமாக இருந்தார். இவரின் வளர்ச்சியை சொக்கநாதரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் மைசூர் படைகள் கி.பி. 1682 ல் மதுரையை தாக்க வர, எதிரிக்கு எதிரி நண்பன்
என்பது போல் அவர்களுடன் சேர்ந்து கொண்டு மதுரையை தாக்கினார். இதில் தஞ்சை நாயக்கர்களிடமிருந்து மதுரை நாயக்கர் பறித்துக்கொண்ட சில பகுதிகளை சேதுபதி மன்னர் கைப்பற்றிக்கொண்டார்.

தன்னிடம் பணிபுரிந்த தளவாய் குமாரப் பிள்ளை என்பவர் மதுரை நாயக்கரிடம் தன்னை பிடித்துக்கொடுக்க சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்ததும் குமாரப்
பிள்ளையின் கை, கால் பாதங்களை வெட்டி கழுவிலே ஏற்றும் படி உத்தரவிட்டார்.
சேதுபதியை அடக்க சொக்க நாதர் பெரும்படையை அனுப்பினார். சேதுபதிக்கு தஞ்சையை ஆண்ட மராட்டிய ஷாஜி தன்னுடையை படைகளை கொடுத்து உதவினார். போரில் மதுரைப்
படை தோல்வியுற்றது.

ஒப்பந்தப்படி சில நிலப்பகுதிகளை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தஞ்சைக்கு கொடுத்தார் சேதுபதி. ஆனால் ஒப்பந்தம் முடிந்து கொடுத்த நிலப்பகுதிகளை ஷாஜி திரும்பத் தர மறுக்கவே, அப்பகுதிகளை போரிட்டு வென்றார் சேதுபதி.

சொக்கநாதர் இறந்தப் பின் ராணி மங்கம்மாள் சேதுபதி மீது போர் தொடுத்தார். போரில் மங்கம்மாளின்தளபதி நரசய்யாவை கொன்று படையை தோற்றோடச் செய்தார் சேதுபதி.

இறைப்பணி பலவற்றை செய்த சேதுபதி இராமேசுவரம் செல்லும் வழியில் பக்தர்களுக்காக தோணித்துறையில் ஒரு சத்திரம் கட்டினார். டச்சுக்காரர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு கடல் வழி வாணிபத்துக்கு வழி வகுத்தார். ஆனால் அதே டச்சுக்காரர்கள் கடலோரப் பகுதியில் கோட்டைக் கட்ட முயற்சிப்பது தெரிந்ததும் அதை முறியடித்தார். தன் பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேதுபதி, முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள திருவாடனைப் பகுதியில் நிலம் ஒதுக்கித் தந்ததாக கல்வெட்டொன்று கூறுகிறது.
ஜான் பிரிட்டோ என்னும் போர்ச்சுக்கல் நாட்டு பாதிரியார் மதமாற்றம் செய்யும் பொருட்டு 1674ல் மறவர் மண்ணுக்குள் நுழைந்தார்.

அத்துடன் அவர் இந்துக்களின் தெய்வ வழிப்பாட்டையும்
குறை கூறியதாக சொல்லப்படுகிறது. முதலில்
அவருக்கு எச்சரிக்கை விடுத்து அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பினார் சேதுபதி.
ஆனால் மறுபடியும் திரும்பி வந்த பாதிரியார் சேதுபதிக்கு சவால் விடுவது போல்
அவரது அண்ணன் மகளை திருமணம் புரிந்த தாதியத்தேவரை கிருத்து மதத்துக்கு மாற்றி விட்டார். தேவருக்கு மொத்தம் ஐந்து மனைவியர்.

கிருத்துவ முறைப்படி ஒருவருக்கு ஒரு மனைவிதான் . எனவே ஒருவரைத் தவிர
மீதி நால்வரை சகோதரிகளாக பாவிக்க வேண்டும் என்று பாதிரியார் கூற, இதில் பாதிக்கப்பட்டசேதுபதியின் அண்ணன் மகள் தன் சித்தப்பாவிடம் வந்து முறையிட்டு அழுதாள்.

பாதிரியாரை பிடித்து வந்து விசாரித்தார் சேதுபதி. அவர் மீதான் குற்றம் நிருபிக்கப்படவே ஊருக்கு ஒதுக்குப் புறமாக கொண்டு செல்லப்பட்ட பாதிரியார் அங்கே அரண்மனை ஆட்களால்
உடல் துண்டிக்கப்பட்டு உயிர் துறந்தார்.
வெறும் மதமாற்றம் மட்டுமே இதில் அடங்கி இல்லை. போர்த்து கீசியர்கள் படிப்படியாக நம்நாட்டை பிடித்துக் கொள்வார்கள் என்ற முன்னெச்சரிகையின் காரணமாகவே சேது பதி இவ்வாறு செய்தார் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
சேதுபதி இறந்த போது அவருக்கு மொத்தம் 47 மனைவிகள் இருந்தனர். அக்காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்ததால் சேதுபதியின் 47 மனைவியரும் உடன்கட்டை ஏறினர். அவர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு பள்ளிபடை கோயில எழுப்பப்பட்டதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

கிழவன் சேதுபதி காலத்தில் மறவர் பூமி வீரம் மிகுந்து இருந்தது.
ஆதாரம்: வரலாற்று ஆய்வாளர் லலிதாமதி அவர்களின் ஆய்வுத் தொகுப்பிலிருந்து.