ஒருநாள் மதிய வேளையில் தான் நடத்திவந்த பள்ளியின் அருகில் உணவருந்திக்கொண்டு வெளியே கவிஞர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவருடன் அவரது வெளிநாட்டு விருந்தினர்களும் இருந்தனர். அவர் தபால் நிலையத்தைக் கடக்கும் போது, ஒருவர் ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பெரிய செய்தி ஒன்றும் இருக்காது என்று தனது பையில் வைத்துக்கொண்டு கிளம்பினார். அருகில் இருந்தவர் கடிதத்தை படிக்கத் தூண்டியதும், உடனே தபாலை பிரித்துப் படித்தார். அதிலிருந்த செய்தியை அவரால் நம்பவே முடியவில்லை. அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய `கீதாஞ்சலி‘ படைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதியிருந்தது. அவர் வேறு யாருமல்ல நமது தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர்தான்.