திருவள்ளுவரிடம் இல்லை மயக்கம் என்ற இந்நூலில் இலக்கிய, இலக்கண நுண்மாண் நுழைபுலமிக்க அறிஞர் டாக்டர் கா. மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஆணித்தரமான சில கருத்துக்களை அள்ளித் தருகிறார்கள். திருவள்ளுவரின் சொற்களிலோ, கூற்றுக்களிலோ, கருத்துக்களிலோ, நோக்கிலோ, மயக்கமோ முரணோ குழப்பமோ இல்லை என்று பதினொரு கட்டுரைகளைப் பக்குவமாக வழங்கியுள்ளார். திருக்குறளுக்குப் பரிமேலழகர் தந்துள்ள உரைகள் சிலவற்றை மறுத்து ஆழ்ந்து பொருள் கூறுகிறார்கள். பல இலக்கிய நூல்களுடனும் பல அறிஞர்களின் சொல் விளக்கங்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்து, திருவள்ளுவர் கையாண்டுள்ள சொற்கள் தெளிந்த பொருள் தருவனவே தவிர மயக்கம் தருவன அல்ல என்று உறுதி செய்கிறார்.