கலை என்பதை அழகியல் உணர்வு என வரையறுக்கலாம். இது காலந்தோறும் தோற்றகாலத்தில் எண்ணியதை விடக் கூடிக்கொண்டே வரும். அவ்வாறு கூடுதலாக அமைவதை வளர்ச்சி எனலாம். தோற்றகாலத்திலிருந்த கலைகளையும் வளர்ச்சி பெற்ற கலைகளையும் அறிஞர்கள் ஆய்ந்து தேடிக் கண்டிவருகின்றனர். அவ்வாறான கலைகளுள் - உடலில் வரைதல் - ஒரு பழைமையான கலை என்பதில் இரண்டுபட்ட கருத்து ஆய்வாளர்களிடையே இல்லை. பொதுவாகக் கலைகள் ஒவ்வொன்றையும் எதனால் விரும்பினான், எப்படி வளர்த்தான், அதற்குப் பயன்பட்ட கருவிகள் யாவை, எவ்வெப்பகுதிகளில் யார்யாரால் அவை வளர்க்கப்பட்டன என்பன போன்றவற்றை அறிவதும் ஆய்வதும் மிகச்சுவையும் பயனும் தரும். அந்த நோக்கில் மனிதன் தன் மேனியை - உடலை- கலைப்படுத்திய பாங்குகளை விளக்க முயல்வதே இக்கட்டுரையின் குறியாகும்.