தமிழ் மருத்துவம் காலங்காலமாக செயல்வழியில் இருந்ததே தவிர நூல் வடிவில் எவரும் எழுதி வைக்க வில்லை. தலைமுறை தலைமுறையாக செயல்முறையிலேயே பற்பல செடி,கொடி மரங்களின் குழை, தழை, இலை,பூ, காய், கனி, பட்டை, வேர்கள் இவற்றினைக் கொண்டு நோய் தீர்த்துக் கொண்டு வந்தார்கள். இம் மருத்துவ முறையை வகுத்தவர்களில் பதினேண்மர் சிறந்தவர்கள்.அவர்களுள் தலையாயவர் அகத்தியர்.அதனால் சித்த மருத்துவ முறையை அகத்திய மருத்துவ முறை என்றும் கூறுவதுண்டு.அகத்தியர் ஆயுர்வேத சூத்திரங்களுக்கும் விரிவுரை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ஆயுர் வேத சூத்திரங்களுக்கு விரிவுரை எழுதியுள்ள யோகானந்தர்,சித்த வைத்திய நூல்கள் இயற்றிய சித்தர்களில் ஒருவர் என்றும் தெரிகிறது.