தலை குனிந்து நின்றிருந்தாள் சந்திரா. அவளுக்குத் தேகமெல்லாம் கூசியது. சந்திரா உன் குடும்பம் எத்தனையோ உசத்தியாய் இந்தக் கிராமத்திலே வாழுது உங்க குடும்பத்தின் மேல ஒருத்தரும் ஒரு குத்தமும் சொல்ல முடியாதபடி இருந்தீங்க. ஆனா இன்னிக்கு உன்மேல குற்றம் சாட்டி நிறுத்தறதுக்கு எங்களுக்கெல்லாம் கஷ்டமாயத்தான் இருக்கு. இருந்தும் பஞ்சாயத்து தன் கடமையைச் செய்யணுமில்லையா? கனைத்துக்கொண்ட பஞ்சாயத்துத் தலைவர் வீரேசலிங்கம் தனது கம்பீரம் கொஞ்சம் குறையுமளவுக்குத் தலை குனிந்து விநயமாய்ச் சொன்னார்.