கலை என்பது அழகின் செறிவு; கருத்தின் பதிவு; கவர்ச்சியின் நிறைவு; மகிழ்ச்சியின் உறைவிடம்; பண்பாட்டின் சிகரம்; வளர்ந்த நாகரிகத்தின் சின்னம்; இவ்வண்ணம் எல்லாந்தான்.
கடவுள் எங்கும் பரவி என்றும் விளங்குவது போலக் கலையும் எங்கும் பரவி என்றும் விளங்கத்தான் செய்கிறது. ஆனாலும், கடவுள் அன்பர்கள் மனத்தில் அவரவர்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப நிரம்பி, அவர்களுடைய சொற்கடோறும் செயல்கடோறும் விரவி வெளிப்படுவதுபோல, கலையும் இயற்கையை- இயற்கையில் இறைவன் கலந்துள்ள நிலையை- இயற்கை எல்லாப் புலன்களுக்கும் இன்பம் ஊட்டுதலை உற்றறிந்து ஓர்ந்துணர்ந்த கலைஞன், அனுபவங்களைத் திரட்டி, மிகாமலும் குறையாமலும் கைவழியாகவும் வாய்வழியாகவும் உரையாகவும் உருவாகவும் அளவாக வார்த்துக் கொடுக்கின்றபோது வெளிப்படுகிறது.