தமிழர் மரபு
முனைவர் இராம.சுந்தரமூர்த்தி
உலக மொழிகளிலே ஒப்பற்ற மொழியாக நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி நிகழ்கிறது. ஒரு நாட்டில் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழியே அம்மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் என வாழ்வியல் நெறிமுறைகளை நமக்கு எடுத்தியம்பும் காலக்கண்ணாடியாகத் திகழ்கிறது. மொழி மட்டுமா? அம்மொழி பேசும் மக்களின் அறிவாற்றலும் அறிவியலோடு அமைந்த தொலைநோக்குச் சிந்தனைகளும் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றைய தலைமுறையைச் சிந்திக்க வைத்து உலகமாந்தரை வியப்பில் ஆழ்த்துகிறது.
நவீனச் சிந்தனைகள் தலையெடுக்கும் முன், படிப்பறிவில்லா பாமரமக்கள் கண்டறிந்த அத்தனையும் இன்றுள்ள நவீன அறிவியலாளரையே திக்குமுக்காட வைக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நவீன தொழில்நுட்பம் முன்னேறாதபோது அவர்கள் செய்த கட்டுமானப் பணிகள், கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை. இசைக்கலை, மருத்துவக்கலை என படிக்கப்படிக்க தமிழனின் அறிவு ஓரறி உயிர் முதல் ஆரறவு உயிர் வரை எப்படிப் பரவி பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை உணரமுடிகிறது. அவர்கள் செய்த இலக்கியங்கள் இன்றும் எத்தனையோ அறிவுரைகளையும் அறவுரைகளையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் நம் தாய் மொழியாகிய தமிழைப்பற்றியும், தமிழனைப்பற்றியும் அவனுடைய அறிவார்ந்த ஆற்றலையும் படித்துப் பயன்பெற வேண்டும். தமிழனாய் பிறப்பதற்கு ஒவ்வொரு நாட்டினரும் தவம் செய்ய வேண்டும். தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சார்ந்த அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் அது. பொறியியல் படிக்கும் மாணவர்கள் தேர்வுக்காக மட்டும் படிக்காமல் சிந்தனையைக் கூராக்க படியுங்கள், வாழ்வியல் நெறிமுகைளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
முதலாமாண்டு பொறியியல் மாணவர்க்கு விருப்பப் பாடமாக நம் தாய்மொழியை அறிமுகம் செய்த முத்துவேலர் மரபில் வந்த முனை மழுங்கா கூர்வேலாம் திராவிடச்சூரியன் தமிழக முதல்வருக்கு நன்றிகள் பல.