நவீனத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பினைப் பரந்து விரிந்ததாக வடிவமைத்ததிலும் வளப்படுத்தியதிலும் புதுமைப்பித்தனின் பங்களிப்பு முதன்மையானது. தமிழிலக்கியத்தில் சிறுகதை மரபு இன்றளவும் வளமும் செழுமையும், விரிவும் ஆழமும், எல்லைகளற்ற வெளியும் கொண்டு இயங்குவதற்கான மூலாதார சக்தியாக விளங்கிய படைப்பு மேதை புதுமைப்பித்தன். தமிழில் நவீனச் சிறுகதை தோற்றம் கொள்ளத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே பெரும் கலைப் பாய்ச்சலோடு படைப்பாக்கத்தில் ஈடுபட்டவர். தம் கால வாழ்வைப் பல்வேறு கோணங்களிலிருந்து அவதானிப்பதற்கும் அறிவதற்குமான படைப்பு வேட்கை கொண்டிருந்தவர். அவருடைய நவீனத்துவக் கண்களின் வெளிச்சத்தில் புலர்ந்ததுதான் நவீனத் தமிழ்ச் சிறுகதை. காலங்கள் கடந்தும் பொலிவு குன்றாத வசீகர படைப்பு மொழி கொண்டவர். பல வகைப்பட்ட, பல தரப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகள் கொண்ட கதை உலகம் இவருடையது. ஒவ்வொரு கதவின் வழியாகவும் இவர் வெகு சுபாவமாகவும் பாந்தமாகவும் உள்நுழைந்து கண்ட வெளிச்சத்தில் புலப்பட்டவைதாம் இவருடைய கதைகள்.