காலம் மாறிவிட்டது
சிநேகிதிகளின் கணவர்களுக்குப் பதில்
சிநேகிதிகளின் காதலர்களைப்பற்றி
எழுதும்படி இந்த உலகம் சிதைந்துவிட்டதுசிநேகிதிகளின் காதலர்கள்
ஏன் எப்போதும் சிநேகிதிகளுக்குத்
தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள்
என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை
அவர்கள் விரல் நகங்கள் அழுக்காக இருக்கின்றன
அவர்கள் வாசனைத் திரவியங்கள் மட்டமானவையாக இருக்கின்றன
அவர்கள் அணிந்திருக்கும் பிராண்டட் சட்டைகள்
60 சதவிகிதத் தள்ளுபடியில் வாங்கப்பட்டவை
அவர்களது ஷூக்கள் இரவல் பெற்றவையாக இருக்கக்கூடும்
அவர்களது பைக் இன்னும் தவணை கட்டி முடியாதவை
வெறுக்கிறேன்
அவர்களது முடி மண்டிய அல்லது
வழுவழுப்பாகச் சிரைக்கப்பட்ட முகங்களை
சிகரெட்டால் கருத்த அவர்களது உதடுகளை
அந்த உதடுகளால்
என் சிநேகிதிகளுக்கு இடும் முத்தங்களைஎன் சிநேகிதிகளின் காதலர்கள்
என் சிநேகிதிகளைப்போலவே
எப்போதும் என்னைவிட
வயதில் இளையவர்களாக இருக்கிறார்கள்
இது என்னை எங்கோ
அந்தரங்கமாக உடைய வைக்கிறது
• சிநேகிதிகள் தங்கள் காதலர்களை
நண்பர்களாக்கிக்கொள்ள நிர்பந்திக்கும்போது
சிலேட்டில் ஆணியால் எழுதுவதுபோல
கடும் பற்கூச்சத்தை உணர்கிறேன்
ஆனால் அவர்கள் கைகளை இறுகப்பற்றிக் குலுக்குகிறேன்
என் பெருந்தன்மையின் முகமூடிகளைக்
கச்சிதமாக அணிந்துகொள்கிறேன்
• சிநேகிதிகளின் காதலர்கள்
வாழ்க்கையில் ஒரு புத்தகம்கூடப் படித்திராதவர்கள் என்பது
என் சிநேகிதிகளுக்கு
ஏன் ஒரு புகாராகவே இல்லை
அவர்கள் சொல்லும் மூன்றாம்தர நகைச்சுவைக்கு
ஏன் அப்படிக் கண்ணீர் மல்கச் சிரிக்கிறார்கள்?