ஒரே பள்ளியில் பணிபுரியும் ஜெனிபரும், செல்லம்மாளும் நெருங்கிய தோழிகள். 'எனக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் கடனா தர முடியுமா?' செல்லம்மாள் கேட்ட ஓர் நாளில், ஜெனிபரின் 10 பவுன் செயின் தொலைந்து போனது.
ஜெனிபர் - ஆரோக்கியதாஸ் காதலுக்கு அவர்களது வீட்டார் சம்மதிக்காத நிலையில், செல்லம்மாளும் நாகராஜனும் தான், 10 பவுன் செயின் போட்டு திருமணம் நடத்தி வைத்தனர்.
'ச்சே... செயினை தொலைச்சுட்டு வர்றதே வழக்கமாகிப் போச்சு!' ஆரோக்கியதாஸ் திட்ட ஜெனிபர் அழுதாள். பின், அவன் வீட்டில் இல்லாத சமயத்தில் செல்லம்மாளுக்கு போன் செய்தாள்.
'நாகராஜனுக்கு உடம்பு எப்படிஇருக்கு?'
'மூச்சு விடுறது சிரமமாயிருக்கு. காலையிலே டாக்டர் வந்து பார்க்கிறேன்னு சொல்லியிருக்காரு!'
காலை... ஜெனிபர் வீட்டுக்கு செல்லம்மாள் வந்தாள்.
'நேத்து கிரவுண்டுல கிடந்தது ஜெனி'- செயினை நீட்டினாள் செல்லம்மாள்.
'நாகராஜனுக்கு இப்போ எப்படியிருக்கு செல்லம்மா?' ஆரோக்கியதாஸ் கேட்டதும், அவள் சொல்லப் போவதை அறிந்த ஜெனிபர் அழத்துவங்கினாள். செல்லம்மாளின் கீழ் இமையில் நின்ற நீர் கன்னத்தில் வடிந்து கொண்டிருந்தது.