வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்துவைத்துக்கொண்டிர்ப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல. வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒருபோதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. வாழ்வின் சுமை தாளாத தருணங்களில் அவை விடும் பெருமூச்சுகளை, ரகிசியமான புணர்ச்சிகளின்போது அவை கசியவிடும் வியர்வைத் துளிகளை, கொடிய வன்முறைகளுக்குள்ளாகிப் பெற்றுள்ள காயங்களிலிருந்து பெருகும் குருதியை, வதைபடும் ஆன்மாவிலிருந்து சோட்டும் கண்ணீர்த்துளிகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி எடுத்து வந்துவிடுகிறார்.