ஊடகங்களில் மொழிப்பயன்பாடு என்னும் ஆய்வு மிகப் பரந்துபட்ட ஒன்றாகும். இன்றைய சூழலில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டுத் தேவைகளில் ஒன்றாக ஊடகங்கள் அமைந்துள்ளன. இவ்ஊடகங்கள் மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இன்று தொலைக்காட்சி வீட்டிலுள்ளவர்களைத் தனித்தனித் தீவுகளாக்கி வருகின்றன. மக்களிடையே பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்கள் பயன்படுத்தும் மொழியமைப்பிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஊடகமொழியின் ஒரு பிரிவாக விளம்பர மொழியும் வளர்ந்து வருகின்றது. உரைநடைத் தமிழ், நாடகத்தமிழ் போன்று ஊடகத்தமிழ் என்ற ஒரு வகை நடை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய ஆராய்ச்சி இனிவரும் ஆய்வாளர்களுக்கு நல்ல ஒரு ஆய்வுக்களமாக அமையும் என்பதில் ஐயமில்லை