இந்திய விடுதலை போர் வரலாற்றில், 1730ல், வெள்ளையர்களை ஓட, ஓட விரட்டி அடித்தவர் வீரத்தாய் வேலுநாச்சியார். அதன்பின், 20 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்டார். மக்களுக்கு நீண்ட நிம்மதியான ஆட்சி தந்த வேலுநாச்சியாரின் வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால், ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களை மையமாக வைத்து, "வீரத்தாய் வேலுநாச்சியார்' வரலாற்று நடன நாடகம் பரதாஸ்ரம் அமைப்பின் மூலம் சென்னையில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு, பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பேசும் போது, "வீரத்தாய் வேலுநாச்சியார் வரலாறு சரித்திர புத்தகத்தில் காட்டப்படவில்லை; மறைக்கப்பட்டுள்ளது. வைகோவின் முயற்சியால், இந்த வீரத்தாயின் வரலாறு நடன நாடகமாக பரதாஸ்ரம் அமைப்பின் மூலம், அற்புதமாக மனதை தொடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மதிநுட்பத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் "வீரத்தாய் வேலுநாச்சியார்' நடன நாடகம், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தப்பட வேண்டும்' என்றார்.