'உலகில் மனிதன் தோன்றி வளர்ச்சியடைந்து இடம் விட்டு இடம் நகரத் தொடங்கியபோது பயணங்கள் நடைபெற்றன. காலால் நடந்து திரிந்தவர் போக்குவரத்துக்காகப் பல்வேறு வழிகளைப் பின்பற்றியுள்ளனர். நீர்வழியைக் கடப்பதற்கு மிதப்பான், வள்ளம், படகு, நீராவிக்கப்பல், கப்பல் எனப் படிப்படியாக வளர்ந்ததைப் போல நிலத்தில் பயணம் செய்த மனிதன் படிப்படியாக முன்னேறி சக்கரம் கண்டுபிடித்து விரைந்து செல்லும் வாகனங்களைக் கண்டுபிடித்தான். அதனடிப்படையில் போக்குவரத்துகள் ஏற்பட்டன. காலால் நடந்த மனிதன் சக்கரங்களால் இயங்கும் ஊர்திகளைக் கண்டுபிடித்தான். அதன் வளர்ச்சியாக மேல்நோக்கிப் பறக்கும் முயற்சியில் விண்கலம், செயற்கைக்கோள், நிலவுப் பயணம், செவ்வாய்க் கிரகப் பயணம், சூரியக்கோளைச் சுற்றுப் பயணம், வாயேஜர் என்று வரலாறு படைத்திருப்பது வியப்பாகவும் விந்தையாகவும் இருக்கிறது. அந்த விந்தையைச் சொல்வது ''மானிடப்பயணம்'' என்னும் இந்த நூல்.35 படிக்கட்டுகள் போல பயணங்களையும் வரிசைப்படுத்துவதாக இந்த நூல் அமைந்துள்ளது.