வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.