cநீங்கள் தொடர்ந்து ஒரு ஆனந்த கடலில் வாழ வேண்டுமென்று நினைத்தால் உங்களைச் சுற்றி ஒரு ஆனந்த அலையை உருவாக்க வேண்டும். உங்களுடைய இருப்பே ஆனந்தமாகிவிட வேண்டும். நீங்கள் தொழில் செய்தாலும், குடும்பம் நடத்தினாலும், என்ன செயல் செய்தாலும் ஒரு ஆனந்தமான சூழ்நிலை உருவாக்கிக் கொள்ளலாமா? ஆனந்த அலை என்பது வெற்றுக் கற்பனை என்று நினைத்துவிட வேண்டாம். கட்டாயமாக மனிதனால் இதைச் செய்ய முடியும். இத்தனை காலங்களாக இது நடக்காமல் போய்விட்டது. இதுவரைக்கும் ஆன்மீகமென்றால், “நீங்கள் சற்று அமைதியாக இருந்தால் போதும்" என்று கூறியிருந்தனர். ஆனால் ஆனந்தமாக இருக்க வேண்டிய நேரம் இது. எனக்கு வெறும் அமைதி வேண்டாம். மனிதன் உயிருடன் இருக்கும்போது தெம்பாக, ஆனந்தமாக, புத்துணர்வாக இருக்க வேண்டும். உயிரோட்டமாக இருக்க வேண்டும். இது ஈஷாவுடைய இயக்கமல்ல. இது எனது விருப்பமல்ல. இதுதான் ஒவ்வொரு உயிரின் நோக்கமாகக் கூட இருக்கிறது.