அமரர் கல்கி நூற்றாண்டினையொட்டி அவரது நினைவு
நாளில் மற்றுமொரு சிறப்பு வெளியீடாக இந்தச் சிறுகதைத்
தொகுதியை வானதி பதிப்பகத்தின் மூலம் பிரசுரிப்பதை
மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். 'புஷ்பப் பல்லக்கு
என்ற தலைப்பில் இடம் பெறும் சிறுகதைகள் அனைத்தும்
முதன் முதலாக நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கின்றன.
இதற்குமுன் வெளியான எந்தத் தொகுதியிலும் இவை இடம்
பெறவில்லை.
இவை அனைத்துமே, கல்கி இதழ் தொடங்கப்படுவதற்கு முன்னால் ஆனந்த விகடன் இதழ்களிலும் தீபாவளி மலர்களிலும் வெளியாகிக் கல்கியில் மறு பிரசுரம் ஆகியுள்ளன. ஒரு கதை கலைமகள் தீபாவளி மலரில் வெளியானது.
இவற்றைத் தவிர 'சித்திரக் கொத்து' என்னும் தலைப்பில்
அமரர் கல்கி 1930இல் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை
ஒன்றையும் முதன் முதலில் இந்தத் தொகுப்பில்
சேர்த்துள்ளோம்.வரலாற்று நோக்கில் பயன்பட வேண்டும் என்பதற்காக, இவை முதலில் வெளியான இதழ்களின் விவரம் தரப்
பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக 'ஒரே
கூரையின் கீழ்' என்கிற மாதிரி வானதி பதிப்பகம், அமரர்
கல்கியின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் நூல் வடிவில்
வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இந்தத்
தொகுப்பும் அன்பர்களின் வரவேற்பைப் பெறும் என
நம்புகிறேன்.