மதுரையிலிருந்துகொழும்பு மாநகருக்கு விமானத்தில் இராமேஸ்வரம் மார்க்கமாக அரைமணி நேரத்தில் சென்றுவிட்டேன். ஆனால், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு எனக்கு காரில் எட்டு மணிநேரம் ஆயிற்று. செல்லுகிற வழியில் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பொன்னியின் செல்வராகிய அருள்மொழிவர்மரை சந்திக்கச் செல்லுகின்ற அநுராதாபுரத்தின் காட்டு வழியாக, இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் பேராசிரியர் கல்கி அவர்கள் குறிப்பிடுகின்ற பிரம்மாண்டமான புத்தர் கோயில்களின் வழியாக யாழ்ப்பாணத்தை அடைந்தேன். அதுவரை என்னோடு வந்தவர்கள், என் துணைவியார் மட்டுமன்று, பொன்னியின் செல்வன் பாத்திரங்களான வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும், அருள்மொழிவர்மனும், ஊமைராணி மந்தாகினியும், மாதண்ட நாயகராகிய கொடும்பாளூர் பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரியும்தான்என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்நாவலின்பெண் பாத்திரங்களான செம்பியன் மாதேவி, வானவன் மாதேவி, குந்தவை, வானதி போன்ற உண்மைப் பாத்திரங்களையும், நந்தினி, மணிமேகலை, பூங்குழலி, மந்தாகினி, படகோட்டியன் முருகையன் மனைவி ராக்கம்மா எனும் கற்பனைப் பாத்திரங்களையும் ஆசிரியர் கதையின் போக்குக்கேற்ப இணைத்திருந்தாலும், படைத்திருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடு விளங்குவதும் படிப்பவரின் மனதில் உயரிய எண்ணங்களை தோற்றுவிக்கும் பாத்திரமாக வருவதும் அற்புதம். அரண்மனை, அந்தப்புரம், கோட்டைகொத்தளங்கள், குதிரைகளின் காலடி ஓசை எனும் சரித்திரச்செய்திகள் அமைந்துள்ள பொன்னியின் செல்வன் டிஸ்கவரிபப்ளிகேஷன் மூலம் வெளிவருவது ஒரு தனிச் சிறப்புத்தானே. மிக நேர்த்தியான முறையில்வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் காலங்களைக் கடந்த புத்தகம். இதோ, இப்போது உங்கள்கைகளில். படிக்கத் தொடங்குங்கள்; பகிர்ந்து கொள்ளுங்கள்; வாங்கி மகிழுங்கள்; வாங்கச் சொல்லுங்கள்...
அன்புடன்
பொன்னியின்செல்வனின் ஐம்பதாண்டுகால வாசகன்
கு. ஞானசம்பந்தன்