'புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் சீனியர் டாக்டர் கே.ஆர்.சேதுராமன் எழுதியது' என்ற அறிமுகத்துடன், எனது ஆசிரியர் இலாகாவிலிருந்து 'ட்ரிக் ஆர் ட்ரீட்' புத்தகத்தைப் பார்வைக்கு வைத்தார்கள். புத்தகத்தின் ஒருசில பக்கங்களைப் படித்து முடிப்பதற்குள்ளேயே, எனக்குள் ஆச்சரியம் கட்டு மீறியது.
'மருத்துவத் துறையில் இருக்கின்ற ஒருவரே, அந்தத் துறையின் அவலங்கள் பற்றி இந்தளவுக்குத் தைரியமாக வெளிப்படுத்த முடியுமா?' என்பது என் முதல் ஆச்சரியம். புரிந்துகொள்வதற்குக் கடினமான மருத்துவத் துறையின் நுணுக்கங்களை, எளிய நீதிக் கதைகளுடன் பளிச்சென விளக்கியிருந்த விதம் அதைவிட ஆச்சரியம்!
'ஒரு பனிமலையின் நுனியளவுதான் இந்தப் புத்தகத்தில் டாக்டர் தொட்டிருக்கிறார். மருத்துவம் பற்றியும் மருத்துவர்கள் பற்றியும் ஒவ்வொரு குடிமகனும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக அவரிடம் நிச்சயம் இருக்கும். ஜூ.வி. வாசகர்களுடன் அதை அவர் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பாரா?' என்று எனக்குள் எண்ணம் ஓடியது.
டாக்டர் சேதுராமனிடம் பேசினோம். 'தவறு எங்கே நடந்தாலும் அதைத் தோலுரித்துக் காட்டுவதில் உங்களுடன் கைகோர்த்துக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சி' என்று சம்மதித்தார் டாக்டர். அப்படித்தான் ஆரம்பமானது 'போஸ்ட்மார்ட்டம்' தொடர்! தொடரின் முதல் இரண்டு அத்தியாயங்கள் வெளியாவதற்குள்ளேயே, சில மருத்துவர்கள் மத்தியிலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு! 'நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் உறவை இந்தக் கட்டுரைத் தொடர் சீர்குலைத்துவிடும்' என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள். 'இது உங்களுக்குத் தேவையில்லாத வேலை' என்று டாக்டர் சேதுராமனிடம் எடுத்துச் சொல்லி, தொடரை அற்பாயுளில் முடிக்க முயன்றவர்களும் உண்டு. உறுதி, டாக்டர் சேதுராமனிடம் இருந்ததால்... தொடர்ந்து அறுபத்தைந்து அத்தியாயங்களில் 'ஆரோக்கியமான போஸ்ட்மார்ட்டம்' அரங்கேறியது.
'காசு கொடுத்து அனுபவிக்கின்ற எந்தவொரு சேவையிலும் குறைவிருந்தால், அதுபற்றித் தயங்காமல் கேள்வி கேட்கலாம்' என்ற நுகர்வோர் விழிப்பு உணர்வு, உலகம் முழுவதும் பரவிவிட்ட காலம் இது. ஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் மருத்துவ சேவை மட்டும் இதற்கு விதிவிலக்காகவே இருந்து வந்தது... வருகிறது! 'டாக்டர் என்பவர் தெய்வம் மாதிரி... அவர் எது சொன்னாலும் செய்தாலும், அது சரியாகத்தான் இருக்கும்' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் நம்மில் பலருக்கு உண்டு.
மருத்துவர்கள் உயிர்காக்கும் தெய்வங்கள் என்பது முற்றிலும் உண்மைதான். ஆனால் அலட்சியம், பணத்தாசை காரணமாக, மருத்துவத் துறையின் புனிதத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில், கறை படிந்த சில வெள்ளைக் கோட்டுகளும் ஊடுருவத் துவங்கிவிட்டன. ஜீரணிக்கக் கடினமாக இருந்தாலும், இதுதான் இன்றைய யதார்த்தம்! 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்று நல்லவர்கள் பலரும் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அதை டாக்டர் கே.ஆர்.சேதுராமன் இந்தத் தொடரின் மூலம் திறம்படச் செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன்.
அவர் கட்டிய மணி, கடைக்கோடியில் உள்ள அப்பாவித் தமிழன் வரை எச்சரிக்கை மணியாக ஒலித்து உஷார்படுத்தியது என்பதிலும் சந்தேகமில்லை. தொடர் வெளியாகி முடியும் வரை, அன்றாடம் எங்களுக்கு வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களே அதற்கு சாட்சி. 'இது வீட்டுக்கு வீடு இருக்கவேண்டிய மருத்துவ கீதை' என்று உணர்ச்சிவசப்பட்ட வாசகர்களும் உண்டு.
அந்தக் கடிதங்கள் அளித்த ஊக்கம், உற்சாகம் காரணமாகத்தான் 'போஸ்ட்மார்ட்டம்' இன்று உங்கள் கைகளில் புத்தக வடிவமாகத் தவழ்கிறது.