book

கந்தரநுபூதி உரையுடன்

Kandharanupoothi

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருபானந்தவாரியார்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :228
பதிப்பு :15
Published on :2014
Out of Stock
Add to Alert List

இந்த நூல் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தரநுபூதி, கிருபானந்த வாரியார் அவர்களால் உரை எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

முன்னுரை:

இறைவன், உயிர், தளை என்ற இந்த மூன்றும் என்றும் உள்ள பொருள்களாம். இக்கருத்து வேதாகமங்களால் கூறப்படுவது.

சான்றவர் ஆய்ந்திடத் தக்கவாம் பொருள் 
மூன்றுள, மறையெலாம் மொழிய நின்றன, 
ஆன்றதோர் தொல்பதி, ஆருயிர்த் தொகை,
வான்றிகழ் தளையென வகுப்பர் அன்னவே.
- கந்தபுராணம்.

கந்தரநுபூதி என்ற சொல் மூன்று வகையாகப் பொருள்படும்.

1.கந்தரைச் சேர்ந்து அடையும் அநுபூதி. "ஐ" என்ற இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர்.
2.கந்தரால் அடையும் அநுபூதி. "ஆல்" என்ற மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை நிலைத் தொடர்.
3. கந்தரின்கண்  அடையும் அநுபூதி. "கண்" என்ற ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொடர் நிலை.

இனி இதன் பொருளை விளக்குதும்:
1.கந்தரைச் சேர்ந்து அடையும் அநுபூதி என்பது:- 
இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம்  என்ற மூன்றையும் முறையே அடைந்து பக்குவப்பட்ட ஒருவர் எல்லாஉயிர்களும் தம்மைப்போல் இன்பம் அடைய வேண்டும் என்றும், கந்தக கடவுளின் கருத்துக்கு இணங்க, அவரை அன்புடன் வழிபட்டு, தாம் வேறு, கந்தக் கடவுள் வேறு என்னாது, உடலும் உயிரும் போல் அவருடன் கலந்து ஒன்றுபட்ட அத்துவித நிலையைக் குறிக்கும்.

2.கந்தரால் அடையும் அநுபூதி என்பது:-
அங்ஙனம் ஒன்றுபட்ட அத்துவித நிலையை அடைந்தவருக்குக் கந்தக் கடவுள், கதிரவன் ஒளியும், கண்ணொளியும் போல அவரின் வேறாய் நின்று தம்மையறிவித்துக் காட்டும் உதவி செய்து பொருளால் வேறாய் நிற்கின்ற அத்துவித நிலையைக் குறிக்கும்.

3.கந்தரின்கண்  அடையும் அநுபூதி என்பது:-
அங்ஙனம் வேறாய் நின்று அறிவித்துக் காட்டும் உதவி செய்யப் பெற்றவரைக் கந்தக் கடவுள், உயிரறிவும் கண்ணொளியும் போல தம்மோடு உடனாய் நிற்கும் செயலிலுஞ் செலுத்திக்காணும் உதவி செய்து உடனாய் நிற்கின்ற அதுவிதத்தைக் குறிக்கும்.

இங்ஙனம் கந்தரநுபூதி என்ற தொகைநிலைச் சொற்றொடர், மூவகைத் தொகாநிலைத் தொடர்களாய் விரிந்து பக்குவம் அடைந்த அடியார் ஒவ்வொருவரும், கந்தக் கடவுளும், கலப்பினால் ஒன்றுபட்டு நிற்கும் அத்துவித நிலையையும், பொருளால் கந்தக் கடவுள் அவருக்கு வேறாய் நின்று காட்டும் உதவியைச் செய்யும் அத்துவித நிலையையும், செலுத்தி நிற்குந் தன்மையால் கந்தவேள் அவரோடு உடனாய் நின்று காணும் உதவியைச் செய்யும் அத்துவித நிலையையும் குறித்து, அம்மூவகை அத்துவித நிலைகளாலும் அவர் அடையும் அநுபூதியாகிய பதிஞானத்தைக் குறிக்கும் என வுணர்க.

எனவே கந்தரநுபூதி என்பது அத்தகைய மெய்யுணர்வைப் பற்றிக் கூறும் நூலுக்குப் பெயராய் அன்மொழித் தொகையாய் வந்தது. 

ஆதலால் இந்தக் கந்தரநுபூதியைக் காதலால் தினம் ஓதுவார் கந்தவேளுடன் கலந்து அவ்விதம் எய்திச் சிவஞானம் பெற்றுப் பேரின்பம் எய்துவர்.

அன்பன்,
கிருபானந்தவாரி. 

எழுத்தாளர் பற்றி :திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.